ஆதரவற்றோர் சடலங்களை தகனம் செய்து வரும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முகமது ஷரீஃப்புக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரை சேர்ந்தவர் முகமது ஷரீஃப். சாமானியர்களை போலவே இவரும் தனது குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். 27 ஆண்டுகளுக்கு முன் சுல்தான்பூரில் அவரது மகன் படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து ஆதரவற்று கிடந்த முகமது ஷரீஃப் மகனின் சடலத்தை சிலர் தகனம் செய்ததாக கூறப்படுகிறது.
ஒரு மாதத்திற்கு பின்பே இந்த விஷயம் முகமது ஷரீஃப்புக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்த ஷரீஃப்புக்கு, அப்போதுதான் ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதிச் சடங்கு செய்து தனது சொந்த செலவிலேயே தகனம் செய்ய வேண்டும் என்ற வைராக்கியம் ஏற்பட்டிருக்கிறது.
அப்போது முதல் இந்தப் பணியை செய்து வரும் ஷரீஃப், இதுவரை 3 ஆயிரம் சடலங்களை தகனம் செய்துள்ளார். அத்துடன் 2 ஆயிரத்து 500 சடலங்களை அடக்கம் செய்துள்ளார். அவரது இந்த மகத்தான பணியை பாராட்டி பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவம் செய்திருக்கிறது மத்திய அரசு.