இந்தியா

”வழிநெடுக ஊக்கமிழக்கவே செய்திருப்பார்கள்”..புது வரலாறு படைத்த கேரள திருநங்கை பத்ம லட்சுமி!

நிவேதா ஜெகராஜா

கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பத்ம லட்சுமி என்ற திருநங்கை கேரள பார் கவுன்சிலில் இன்று பதிவுசெய்துகொண்டார்.

LiveLaw இணையதள தகவலின்படி மார்ச் 19-ம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 1,500 பட்டதாரிகளுடன் சேர்ந்து பட்டம் பெற்றிருக்கிறார் பத்ம லட்சுமி. இவருக்கு கேரள சட்ட அமைச்சர் பி.ராஜீவ் தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், “பல்வேறு தடைகளை கடந்துவந்து, இன்று இந்த இடத்தில் முதல் திருநங்கை வழக்கறிஞராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ள பத்ம லட்சுமிக்கு வாழ்த்துகள். எப்போதும் முதன்முதலாக ஒரு விஷயத்தை செய்வதென்பது, வரலாற்றில் மிகக்கடினமான சாதனையாகவே இருக்கும்.

ஏனெனில் முன்னோர் என்றொருவரே அங்கு இருக்கமாட்டார்கள். அதனால் தடைகள் எங்கு இருக்குமென்றே தெரியாது. வழிநெடுக, நம்மை தடுக்கவும் ஊக்கமிழக்க செய்யவுமே பலர் இருப்பர். அப்படியான ஒரு பாதையை கடந்துவந்து, பத்ம பிரியா சட்டத்தில் புது வரலாறு படைத்திருக்கிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். 

தொடர்ந்து இணையவாசிகளும் தங்களின் வாழ்த்துகளை பத்ம லட்சுமிக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.