இந்தியா

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது...ப.சிதம்பரம்

webteam

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது என முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

கவுகாத்தியில் உள்ள ஆய்வு மையத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்துப் பேசிய ப. சிதம்பரம், மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கறுப்புப் பணம் ஒழியும் என்பது ஏமாற்று வேலை என்று கூறியுள்ளார். மேலும் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழல் ஒழியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பழைய ரூபாய் நோட்டுகளில் கையூட்டு பெற்றவர்கள் தற்போது புதிய ரூபாய் நோட்டுகளில் பெறுவது மட்டுமே இதனால் நிகழ்ந்துள்ள மாற்றம் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதிய ரூபாய் நோட்டுகளை எவ்வளவு அச்சடிக்க முடியும் என்பது குறித்த தெளிவில்லாமல் மத்திய அரசு பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பல முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில், தற்போதைய ஆளுநர் உர்ஜித் பட்டேல் பொறுப்பேற்ற 64 நாள்களுக்குள் இதற்கு அனுமதி அளித்துள்ளார் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.