இந்தியா

‘வேலை வாங்கித் தருவதாக ரூ.2.17 கோடி மோசடி’ - முரளிதர ராவ் மீது வழக்குப் பதிவு

rajakannan

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்தை போட்டு மோசடி செய்ததாக, பாஜக பொதுச் செயலாளர் முரளிதர ராவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஐதராபாத்தைச் சேர்ந்த பிரவர்னா ரெட்டி(41) என்ற பெண் சரூர் நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளார். அந்தப் புகாரில், ‘பார்மா எக்சல் தலைவர் பதவி வாங்கி தருவதாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் போலியான கையெழுத்திட்டு பணி நியமன ஆணையை வழங்கினார்’ என்று தெரிவித்து இருந்தார். அதற்காக ரூ2.17 கோடி ரூபாய் தொகையையும் பெற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்து இருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், பாஜக பொதுச் செயலாளர் முரளிதர ராவ் உட்பட 9 பேர் மீது ஐதராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். “நியமன பதவி வாங்கித் தருவதாக உறுதி அளித்து ரூ2.17 கோடி பெற்றுக் கொண்டதாக பிரவர்னா ரெட்டி என்பவர் அளித்த புகாரில் முரளிதர ராவ் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நீதிமன்ற உத்தரவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று சரூர்நகர் காவல் ஆய்வாளர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு முரளிதர ராவ் அளித்த பேட்டியில், ‘என் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை. இந்த விவகாரத்தில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை’ என்று கூறியுள்ளார்.

தெலுங்கானாவில் பாஜகவுடன் நெருக்கமாக உள்ளதாக கூறப்படும் ஈஸ்வர் ரெட்டி என்பவர், முரளிதர ராவின் உதவியாளர் கிருஷ்ண கிஷோரை பிரவர்னாவிற்கு அறிமுகம் செய்து வைக்கிறார். பிரவர்னா தன்னுடைய கணவர் மகிபால் ரெட்டிக்கு பார்மா எக்சில் தலைவர் பதவி பெற்று தர பணம் பெற்றுக் கொண்டதாக புகாரில் கூறியுள்ளார். அந்த நிறுவனம் மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. அப்போது, அந்தத் துறைக்கு நிர்மலா சீதாராமன் தான் அமைச்சராக இருந்தார். அவரது கையெழுத்து உள்ள பணி நியமன ஆணையை தங்களுக்கு காட்டியதாகவும் பிரவர்னா கூறியுள்ளார். பின்னர்தான், தன்னுடைய கணவர் மகிபால் அந்தப் பதவிக்கு நியமனம் செய்யப்படவில்லை என்பதும் ஏமாற்றப்பட்டுள்ளது தங்களுக்கு தெரியவந்தது என்று அவர் கூறியுள்ளார்.