இந்தியா

எதிர்காலத்தில் தமிழ்நாடு பிரிக்கப்படலாம் : ப.சிதம்பரம்

webteam

தமிழ்நாட்டை எதிர்காலத்தில் மத்திய அரசு பிரித்தால் எப்படி தடுக்க முடியும்? என மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு-காஷ்மீர் பிரிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைக் கொண்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு- காஷ்மீரும், சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக்கும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு சில கட்சிகள் ஆதரவும், சில கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் “மத்திய உள்துறை அமைச்சர் அவர்களே! எனக்கு உண்மையிலேயே அச்சமாக உள்ளது. வன்முறையில் ஈடுபடாத ஆயிரக்கணக்கான இளைஞர்களை வன்முறையில் ஈடுபடவைக்கும் நடவடிக்கையாக மத்திய அரசின் முடிவு உள்ளது. ‌மத்திய அர‌சு எதிர்காலத்தில் வடக்கு வங்காளத்தை யூனியன் பிரதேசமாகவோ, தனி மாநிலமாகவோ மாற்றினால் எப்படி தடுக்க முடியும்? 

தமிழ்நாட்டை எதிர்காலத்தில் மத்திய அரசு பிரித்தால் எப்படி தடுக்க முடியும்? அதிமுகவை சேர்ந்த என்னுடயை நண்பர்கள் இங்கு இருக்கிறார்கள். மத்திய அரசின் நடவடிக்கையை அவர்கள் உணரவே இல்லை. இதே முடிவை எந்த ஒரு மாநிலத்திலும் நடைமுறைப்படுத்த முடியும். மத்திய அரசின் மாபெரும் வெற்றி என்று அவையில் உள்ள உறுப்பினர் ஒருவர் கூறினார். ஆனால் அது மிகவும் தவறு. இது தவறான முடிவு என்பதை எதிர்கால சந்ததியினர் உணருவார்கள்” எனத் தெரிவித்தார். 

இதையடுத்து தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பார்கள் என்று சொல்லப்படுவது, வெறும் அரசியல் காரணங்களுக்காக தான் என்றும், அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.