ப. சிதம்பரம் PT WEB
இந்தியா

ப. சிதம்பரம் எழுதும் | சாதி, மத கண்ணிகளிலிருந்து மீளுமா பிஹார்?

பீகார் மாநிலத்தைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் துயரத்தையே அளிக்கும். மிகவும் புறக்கணிக்கப்பட்டதும் வீண் தற்பெருமைகளால் பாழானதும் தான் பீகாரின் கதை.

ப. சிதம்பரம்

பீகார் மாநிலம், இயற்கை வளம் மற்றும் அரசியல் தலைவர்களின் பங்களிப்புகளுடன் இருந்தாலும், மதம் மற்றும் சாதி பிரச்சினைகளால் பின்தங்கியுள்ளது. நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சியின் நீண்டகால செயல்பாடுகள் மாநிலத்தின் வளர்ச்சியை பாதித்துள்ளன. 2025 தேர்தலில், பீகாரின் எதிர்காலம் மற்றும் நிதிஷ் குமாரின் ஆட்சியின் விளைவுகள் முக்கியமாக பேசப்படும்.

பீகார் மாநிலத்தைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் துயரத்தையே அளிக்கும். மிகவும் புறக்கணிக்கப்பட்டதும் வீண் தற்பெருமைகளால் பாழானதும் தான் பீகாரின் கதை.

நாடு சுதந்திரம் அடைந்தபோது அல்லது 1950இல், ‘நாங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டோம்’ என்று எந்த ஒரு மாநிலமும் குற்றஞ்சாட்ட முடியாது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிதான் ஒன்றியத்திலும் - மாநிலங்களிலும் ஆட்சி செய்தது என்பதால், ஒரே மாதிரியான கொள்கைகளும் வளர்ச்சித் திட்டங்களும் தான் எல்லா இடங்களிலும் அமல் செய்யப்பட்டன. உண்மையில், சில முற்போக்கான திட்டங்கள் முதலில் பீகாரில் தான் அமல்செய்து சோதிக்கப்பட்டு பிறகு பிற மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டன; உதாரணம் காட்ட வேண்டுமென்றால் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளையும் நிலமற்ற விவசாயிகளுக்கு அவற்றைப் பிரித்து வழங்கியதையும் கூறலாம்.

பிகார்

பீகார் மாநிலத்திலிருந்து ஆளுமைமிக்க அரசியல் தலைவர்கள் பலர் தோன்றினர். அதனுடைய அரசு நிர்வாகம் புகழ்பெற்ற நிர்வாகிகளைக் கொண்டிருந்தது. வற்றாத ஜீவ நதியான கங்கை ஓடுகிறது, செழிப்பான நிலங்களும் ஏராளம். இயற்கையிலேயே கனிம வளங்கள் மிகுந்த மாநிலம், இந்தியாவின் முதல் உருக்கு ஆலை – பிரிக்கப்படாத - பீகார் மாநிலத்தில்தான் முதலில் தொடங்கப்பட்டது. நாட்டின் முன்னணி உயர் நீதிமன்றங்கள் நான்கில் ஒன்றாக பாட்னா (பாடலிபுத்திரம்) உயர் நீதிமன்றம் திகழ்ந்தது; அதன் நீதித்துறை நிர்வாகம் தொடக்க காலத்தில் மிகவும் வலிமையாக இருந்தது. இவ்வளவு இருந்தும் அரசியல், பொருளாதார, சமூக வளர்ச்சியில் ஏன் பின்தங்கிவிட்டது பீகார்?

தோல்வியுற்ற மாநிலம்

பீகார் மாநிலம் தொடர்பான அரசுத் தரவுகளைப் படித்தாலே சோர்வு வரும். ‘உண்மை நிலவரம் இதைவிட மோசம்’ என்கிறார்கள் அந்த மாநிலத்தைத் தொடர்ந்து கவனித்து வருபவர்கள். பீகாரின் பின்தங்கிய நிலைமைக்கு எல்லா அரசுகளும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றாலும் 2005 நவம்பர் 24 முதல் தொடர்ந்து சுமார் 20 ஆண்டுகளாக முதலமைச்சர் பதவியை வகிக்கும் நிதிஷ்குமார்தான் அதிகம் பொறுப்பேற்க வேண்டியவர். சுமார் 278 நாள்களுக்கு ஜித்தன்ராம் மாஞ்சியை அவர் இடைக்காலமாக, முதலமைச்சர் பதவியில் அமர்த்தியிருந்தாலும் நிர்வாகம் அவருடைய கட்டுப்பாட்டில்தான் அப்போதும் இருந்தது.

நிதிஷ் குமார்

அவருக்கும் முன்னால் லாலு பிரசாத் யாதவும், அவருடைய மனைவி ராப்ரி தேவியும் 1990 முதல் 2005 வரையில் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தனர். இப்போது 35 வயதுக்கும் குறைவான பீகார் வாக்காளர்களுக்கு நிதிஷ் குமாரை மட்டுமே அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு. பீகாரில் 2025இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 1990-களைப் பற்றியதோ அல்லது அதற்கும் முன்னால் ஆட்சியில் இருந்தவர்களைப் பற்றியதோ அல்ல - நிதிஷின் தொடர் இருபதாண்டுக்கால ஆட்சியின் விளைவுகளைப் பற்றியது.

பீகாரின் மக்கள் தொகை 2025இல் 13.43 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு கோடி முதல் மூன்று கோடிப் பேர் வரையில் வேலைவாய்ப்புக்காக பிற மாநிலங்களுக்குச் சென்றிருப்பார்கள் என்றும் தெரிகிறது. இப்படி அவர்கள் வெளியேற முக்கியக் காரணம் பிஹாரில் நிலவும் வறுமையும் வேலைவாய்ப்பின்மையும்தான்.

Ø இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை 10.8% ஆக இருக்கிறது. இதில் வியப்பு என்னவென்றால் படித்த இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை சதவீதம் அதிகமாக இருப்பதுதான். பீகாரில் உள்ள ஆலைகளில் 1,35,464 பேர்தான் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர், அவர்களிலும் 34,700 பேர்தான் நிரந்தர வேலைவாய்ப்புள்ளவர்கள்.

பீகார்

Ø இந்தியாவிலேயே வறியவர்களை அதிகம் கொண்ட மாநிலம் பீகார்தான் என்று நிதி-ஆயோக் அமைப்பின் 2024 அறிக்கை தெரிவிக்கிறது. பீகாரில் உள்ள குடும்பங்களில் 64%, மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாகத்தான் வருவாய் பெறுகின்றன, 4% குடும்பங்கள் மட்டும்தான் மாதந்தோறும் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமாக சம்பாதிக்கின்றன.

Ø பல்பரிமாணங்களைக் கொண்ட வறுமைக் குறியீட்டெண்படி பீகார்தான் மிகவும் மோசமான நிலையில் (33.76%) இருக்கிறது. பிறந்த குழந்தை உயிர்பிழைத்து வாழ்வது, மகப்பேறு காலத்தில் பெண்ணின் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பது, தூய்மையான சமையல் எரிபொருள் கிடைப்பது, பொது சுகாதாரம் ஆகியவற்றில் அதிகம் பின்தங்கியிருப்பது பீகார் மாநிலம்தான். பின்தங்கலில் முதலிடம் பீகாருக்குத்தான்! தரமான கல்வி, கௌரவமான பணி, பொருளாதார வளர்ச்சி ஆகிய குறியீடுகளைக் கொண்ட பட்டியலில் பீகார் கடைசி இடத்தில் இருக்கிறது. (ஆதாரம்: நிதி ஆயோக், பீகார் பொருளாதார ஆய்வறிக்கை 2024-25, தேசிய குறியீட்டெண், அஇகாக ஆய்வுத் துறை).

பேரியியல் பொருளாதாரச் சூழல் பீகாரில் இந்த அளவுக்கு மோசமாக இருப்பதற்கு நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சிதான் முக்கியக் காரணம். இந்திய மக்கள் தொகையில் 9% கொண்டுள்ள பீகார், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்திக்கு 3.07% அளவுக்கே பங்களிப்பு செய்துள்ளது. மாநிலத்தில் நபர்வாரி (தனி நபர்) வருமானம் 2023-24இல் ரூ.32,174, அதாவது தேசிய சராசரியான ரூ.1,06,744இல் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. தேசிய சராசரி தனிநபர் வருமானத்தைவிட பீகாரில் தனிநபர் வருமான சராசரி மேலும் மேலும் குறைந்துவருவதால் இந்த இடைவெளி அதிகரிப்பது மேலும் கவலை தருகிறது. 2024-25இல் பீகாரின் நிதி பற்றாக்குறை, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 9.2%, ஆனால் வளர்ச்சிக்கான மாநில முதலீடு அதே மொத்த உற்பத்தி மதிப்பில் வெறும் 4%. அதாவது மாநிலத்தின் வருவாய் போதவில்லை என்பதால் கடன் வாங்கித்தான் அரசு தனது நிர்வாகச் செலவுகளைச் சமாளிக்கிறது, நுகர்வுக்கும் எடுத்துக் கொள்கிறது. (ஆதாரம்: இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய பட்ஜெட்டுகள் ஆய்வறிக்கை, அஇகாக ஆய்வுத்துறை).

பிகார்

மதம்- சாதி இரு கண்ணிகள்

இயற்கை வளம், வற்றாத ஜீவநதி, உழைக்கும் மக்கள் என்று பல சாதகமான அம்சங்கள் இருந்தும் இந்த அளவுக்கு பீகார் பின் தங்கியிருப்பதற்குக் காரணம் ‘மதம் – சாதி’ என்ற இரு கண்ணிகளில் அதன் கால்கள் ஆழப் புதைந்துவிட்டதுதான் என்று கருதுகிறேன். பீகார் அரசும் அதன் அமைப்புகளும் ‘மதம் – சாதி’ என்ற சுயமாக உருவாக்கிய கண்ணிகளில் சிக்கிவிட்டன. மாநில நிர்வாகத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் மத உணர்வைக் கலந்துவிட்டது பாரதிய ஜனதா. “அரசின் நலத்திட்டங்கள் மூலம் பலனைப் பெற்றாலும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பதில்லை முஸ்லிம்கள், நம்பிக்கைத் துரோகிகளான அவர்களுடைய வாக்குகள் தேவையில்லை” என்று ஒன்றிய அரசில் அமைச்சராகப் பதவி வகிக்கும் கிரிராஜ் சிங் காட்டமாகப் பேசியிருப்பதைக் கேளுங்கள். மாநில மக்கள் தொகையில் 17% அளவுக்கு முஸ்லிம்கள் வாழும் மாநிலத்தில் இந்த நிலை (இந்துக்கள் எண்ணிக்கை 82%).

மக்களுடைய அரசியல் உரையாடலிலும் சாதியச் சார்புகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் - இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்பிசி), பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பினர் (இபிசி) என்று - துண்டு துண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவினரில் மட்டும் 112 சாதிகள் உள்ளன, அவற்றில் 4 சாதிகள் மட்டுமே மக்கள் எண்ணிக்கையில் அதிகம் என்பதால் அரசியல் செல்வாக்கு அதிகம் பெற்றுள்ளன. இந்திய சமூகமே மத, சாதிய அடையாளங்களைக் கொண்டதுதான் என்றாலும் பீகாரில் அதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதால் வளர்ச்சி வாய்ப்புகளை அவை கணிசமாகக் குறைக்கின்றன. அனைவரும் ஒற்றுமையாக இருந்து பீகாரை முன்னேற்ற வேண்டும் என்ற உணர்வு இல்லாமல், தங்களுக்குள் வீண் சந்தேகத்தையும் பகையையும் கசப்புணர்வுகளையும் மோதல்களையும் வளர்த்துக் கொள்கின்றனர்.

பிகார் தேர்தல்

நிதிஷ்குமாரால் மாற்றம் வராது

பிகாரின் அரசியலும் நிர்வாகமும் கட்டாயம் மாறியாக வேண்டும். அதை யார் மாற்றுவார்கள்? இதற்கான பதில்கள் பலவாக இருக்கலாம், ஆனால் நிதிஷ்குமாரால் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்பதே உண்மை. இருபதாண்டுக்காலமாக ஊறிவிட்ட நடைமுறையிலிருந்து அவரால் மீள முடியாது. அத்தோடு அவருடைய உடல் நலமும் குன்றி வருகிறது, எப்போது எப்படி நடந்து கொள்வார் என்றும் சொல்ல முடியாத குணம் உள்ளவர். நிதிஷ்குமார் தன்னளவில் பெரிதும் மாறிவிடுவார் என்றோ இனி அவருடைய நிர்வாகம் மாறிவிடும் என்றோ எதிர்பார்ப்பது முட்டாள்தனம். பஞ்சாப், ஹரியானா, ஒடிஷா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் அரசியல் கூட்டு வைத்து கூட்டணிக் கட்சிகளையே பலி கொடுத்துவரும் இயல்புள்ள பாரதிய ஜனதாவில் இனி அவர் பலியாடாகவே தொடர்வார்.

பாரதிய ஜனதாவால் அரவணைக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் ஒவ்வொன்றும் அரசியல்ரீதியாகத் தோல்விடைந்தன அல்லது காணாமலே போய்விட்டன. ஐக்கிய ஜனதா தளத்தின் நிலைமை நிச்சயம் வேறாக இருக்கப் போவதில்லை.

சாதி என்பது வீட்டோடு இருக்க வேண்டும். மதம் என்பது வழிபடும் இடங்களில் மட்டும் இருக்க வேண்டும். இரண்டுமே அரசியலிலும் நிர்வாகத்திலும் கலந்துவரக் கூடாது. இந்த உண்மையை பிகார் மக்கள் உணர்ந்து விழிப்புணர்வு பெற்றுவிட்டால் முன்னேறவிடாமல் தங்களைக் கட்டிப்போட்டிருக்கும் தளைகளை அறுத்துக் கொண்டு வெளியே வந்துவிடுவார்கள்.