காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள டெல்லி சிபிஐ தலைமை அலுவலகம் கடந்த 2011ஆம் ஆண்டில் அவரால்தான் திறந்து வைக்கப்பட்டது.
ஐஎன்எஸ் மீடியா வழக்கில், சுவர் ஏறி குதித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ஒருவர், இந்தியாவில் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை. டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அதாவது தன்னால் திறக்கப்பட்ட சிபிஐ அலுவலகத்திலே அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் எடுத்த முயற்சியின் விளைவாக டெல்லி சிபிஐ தலைமை அலுவலக கட்டடம் கட்டப்பட்டது. 2011 ஜூன் 30ஆம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் இக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. தற்போது காலச்சக்கரம் முழுமையாகச் சுழன்று, சிதம்பரத்தால் திறப்பு விழா கண்ட அதே கட்டடத்தில் தான் அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தார்.