இந்தியா

ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் கா‌வல்‌ அக்டோபர் 3 வரை நீட்டிப்பு

ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் கா‌வல்‌ அக்டோபர் 3 வரை நீட்டிப்பு

Rasus

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் கா‌வலை‌ அக்டோபர் 3-ஆம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நிதியை பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு உதவியதாக, கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது காவல் முடிவடைந்த நிலையில், டெல்லியிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ப.சிதம்பரத்தின் காவலை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் வாதி‌டப்பட்டது.‌

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், சிதம்பரத்திற்கு ‌பல்வேறு உடல்‌ நலக்குறைவு உள்ளதாகவும், ‌எனவே, அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும், மருத்துவர்களின் பரிந்துரைப்படி உணவுகள் சாப்பிடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், சிறையில் தலையணைகள், நாற்காலி உள்ளிட்ட வசதிகள் சிதம்பரத்திற்கு அளிக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

கபில் சிபலின் இந்தப் புகாரை மறுத்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, சிதம்பரம் உடல் நலத்தின் மீது சிபிஐக்கு அக்கறை இருப்பதாகவும், ‌மருத்துவ பரிசோதனை செய்வது சிறை அதிகாரிகள் முடிவுக்கு உட்பட்டது என்றும், எனவே அவரது நீதிமன்றக் காவலை இம்மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் ப.சிதம்பரத்தை வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டது.