ப சிதம்பரம் - மோடி
ப சிதம்பரம் - மோடி File image
இந்தியா

“பொது சிவில் சட்டத்தை பயன்படுத்துகிறது பாஜக”- பிரதமரின் முத்தலாக் கருத்துக்கு ப.சிதம்பரம் பதில்!

PT WEB

அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வந்த பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, மத்திய பிரதேசத்தில் 5 வந்தே பாரத் ரயில்களை கொடி அசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி, போபாலில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாடினார்.

அப்போது பேசிய அவர், “முத்தலாக் இஸ்லாமிய மதத்தில் அவசியமானது என்றால் எதற்காக பல இஸ்லாமிய நாடுகளில் அது தடை செய்யப்பட்டுள்ளது. முத்தலாக்கை ஆதரிப்பவர்கள் வாக்கு வங்கி பசியில் இருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாமிய பெண்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். ஒரு குடும்பம் இரு விதிமுறைகளின் கீழ் இயங்குமா?.., அதேபோல் ஒரு நாடு எப்படி இரு விதமான சட்டங்களின் கீழ் செயல்படும்?

இந்தச் சட்டத்தின் பேரில் எதிர்கட்சியினர் மக்களைத் தூண்டி விடுகிறார்கள். அப்படி அரசியல் செய்பவர்களை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எதிர்கட்சியினரின் அரசியலுக்கு பலியாகும் இஸ்லாமிய மக்களிடம் பாஜகவினர் பொது சிவில் சட்டத்தை பற்றி தெரியப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இது ஒருபுறமிருக்க, பணவீக்கம், வேலையின்மை போன்ற பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே பிரதமர் இவ்வாறு பேசியுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இது குறித்து தனது ட்விட்டரில், “பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் குறித்து பேசும் போது தேசத்தை குடும்பத்துடன் ஒப்பிட்டார். ஒரு வகையில் இந்த ஒப்பீடு உண்மையாகப்பட்டாலும் உண்மையில் அது மிகவும் வித்தியாசமானது.

ஒரு குடும்பமானது இரத்த உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு தேசமோ அரசியல் சாசனங்களால் ஒன்றிணைக்கப்படுகிறது. அதேசமயத்தில், ஒரு குடும்பத்தில் கூட பன்முகத்தன்மை உள்ளது. அரசியல் சாசனமும் மக்களிடையே உள்ள பன்முகத்தன்மையை அங்கீகரிக்கிறது.

பொது சிவில் சட்டத்தை, ஒரு நிகழ்ச்சி நிரலால் இயங்கும் பெரும்பான்மை கொண்ட அரசால் மக்களிடையே திணிக்க முடியாது. பொது சிவில் சட்டம் என்பது சிறு பயிற்சி என்பது போல் பிரதமர் மோடி மக்களிடையே தோன்றச் செய்கிறார். ஆனால், அது சாத்தியமில்லை என்ற கடந்த சட்ட ஆணையத்தின் அறிக்கையை அவர் படிக்க வேண்டும்.

பாஜகவின் சொல்லாலும் செயலாலும் தேசம் இன்று பிளவுபட்டுள்ளது. பொதுசிவில் சட்டம் மக்களிடையே திணிக்கப்பட்டால் அது பிளவை மேலும் விரிவுபடுத்தவே செய்யும்.

பணவீக்கம், வேலையின்மை, வெறுப்புக் குற்றங்கள், பாகுபாடு மற்றும் மாநிலங்களின் உரிமைகளை மறுப்பது பொன்ற செயல்களில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே பிரதமர் மோடி பொது சிவில் சட்டத்தை பேசுவதன் நோக்கம். மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

நல்லாட்சி தருவதில் பாஜக தோல்வி அடைந்ததால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற பாஜக பொது சிவில் சட்டத்தை பயன்படுத்துகிறது” என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

- அங்கேஷ்வர்