இந்தியா

நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கறிஞர்களால் சுற்றி வளைக்கப்பட்ட ப.சிதம்பரம்: காரணம் என்ன?

ஜா. ஜாக்சன் சிங்

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வாதாடினார். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே அவரை சுற்றி வளைத்து எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த மாநில அரசுக்கு சொந்தமான 'மெட்ரோ டைரி' என்ற பால் பொருட்கள் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள், 'கெவன்ட்டர்' தனியார் நிறுவனத்துக்கு அண்மையில் விற்பனை செய்யப்பட்டன.

இதற்கு அம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, மெட்ரோ டைரி நிறுவனத்தின் பங்குகள் கெவன்ட்டர்' நிறுவனத்துக்கு விற்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டி தலைவர் அதிர் செளத்ரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த சூழலில், இவ்வழக்கு விசாரணை நேற்று தொடங்கியது. அப்போது, கெவன்ட்டர் நிறுவனத்தின் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் ஆஜராகி, மேற்கு வங்க அரசுக்கு ஆதரவாக வாதாடினார். இது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்தது. இந்நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்த பிறகு, வெளியே வந்த ப. சிதம்பரத்தை காங்கிரஸ் வழக்கறிஞர்கள் சுற்றி வளைத்து அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். ப. சிதம்பரம் காரில் ஏறி செல்லும் வரை அவரை வழக்கறிஞர்கள் பின்தொடர்ந்து வந்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டி தலைவர் அதிர் செளத்ரி கூறுகையில், "காங்கிரஸ் ஆதரவாளர்களின் இயற்கையான எதிர்வினையாகவே இதனை பார்க்கிறேன். எது எப்படியோ.., வழக்கறிஞர் என்ற முறையில் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவாக வாதாட ப.சிதம்பரத்துக்கு உரிமை இருக்கிறது. அது தனிநபர் விருப்பம் சார்ந்தது. இதில் யாரும் யாரையும் நிர்பந்தப்படுத்த முடியாது" என்றார்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ப. சிதம்பரம், "இது சுதந்திர நாடு; இதில் கருத்து கூற ஒன்றுமில்லை" என்றார்.