இந்தியா

“தீண்டத்தகாதவர்கள்போல் நடத்தினார்கள்” - பீகார் தேர்தலில் அசத்திய ஓவைசி கட்சி

Sinekadhara

பீகாரில் 5 தொகுதிகளில் வெற்றிபெற்று அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமீன் கட்சி நாடெங்கும் தனது தளத்தை விரிவாக்க திட்டமிட்டுள்ளது

பீகாரில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமீன் (A.I.M.I.M) கட்சி ஒன்று புள்ளி இரண்டு நான்கு சதவிகித வாக்குகளை பெற்றதுடன் 5 தொகுதிகளையும் வென்றுள்ளது. இஸ்லாமியர்களின் வாக்குகளை இக்கட்சி பெருமளவு பிரித்ததே பீகாரில் மகா கூட்டணி தோல்விக்கு முக்கிய காரணம் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமீன் (A.I.M.I.M) கட்சியின் தலைவரும் ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, அடுத்து உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள பேரவை தேர்தல்களிலும் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார். நாட்டில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் கூட போட்டியிட தயார் என்றும் அவர் கூறினார்.

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் மட்டும் வலுவாக இருந்த அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமீன் கட்சி (A.I.M.I.M) தற்போது பிற மாநிலங்களிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவில் 2 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் ஒரு மக்களவை உறுப்பினரையும் இக்கட்சி பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது பீகாரிலும் 5 பேரவை உறுப்பினர்களை பெற்றுள்ளது. அடுத்தபடியாக உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களின் தேர்தல்களில் முத்திரை பதிக்கவும் இக்கட்சி இலக்கு வைத்துள்ளது.

முன்னதாக தேர்தல் வெற்றிக்கு பின்னர் பேசிய ஓவைசி, “பீகார் மக்கள் எங்களுக்கு வாக்களித்து அவர்களின் ஆசீர்வாதங்களை எங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். அரசியலில் தவறுகளிலிருந்து பாடம் கற்க வேண்டும். மஜ்லிஸ் கட்சியின் பீகார் தலைவர் ஒவ்வோர் அரசியல் கட்சியின் தலைவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். ஆனால், எந்த ஒரு கட்சியும் எங்களை மதிக்கவில்லை. பெரிய கட்சிகள் அனைத்தும் எங்களைத் தீண்டத்தகாதவர்கள்போல் நடத்தினார்கள். ஒவ்வொரு முஸ்லிம் தலைவரையும் சந்தித்தோம். ஆனால், எதுவும் கைகொடுக்கவில்லை, அதற்கான காரணங்கள் விவரிக்க முடியாதவை” என்று கூறினார்.