இந்தியா

மோடியின் வெளிநாட்டு பயணச்செலவு ரூ.2,021 கோடி !

மோடியின் வெளிநாட்டு பயணச்செலவு ரூ.2,021 கோடி !

webteam

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை ரூ.2,021 கோடி செலவாகி இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. இந்த நிலையில் பாராளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பினோய் விஸ்வம், “பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு எந்தெந்த நாடுகளுக்கு சென்றார். அதற்கான செலவு எவ்வளவு?” என்று கேள்வி எழுப்பினார்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் மோடி பிரதமர் ஆனதிலிருந்து 55 வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் இதில் சில நாடுகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை சென்றுள்ளதாகவும் கூறினார். நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை ரூ.2,021 கோடி செலவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் அதிக முதலீடு செய்த முதல் 10 நாடுகளுக்கும் பிரதமர் மோடி சென்றிருந்ததாகவும் மோடியின் வெளிநாட்டு பயணங்களால், கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவுக்குள் 13 ஆயிரத்து 607 கோடி டாலர்கள் அன்னிய நேரடி முதலீடாக வந்துள்ளதாகவும் ஆனால் இது மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 2011 முதல் 2014 கால கட்டத்தில் 8 ஆயிரத்து 184 கோடி டாலராக மட்டுமே இருந்தது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். 

பிரதமர் மோடி வெளிநாடுகளில் அதிக சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த நிலையில் பிரதமர் அலுவலக இணையதளத்தில் மோடி எந்தெந்த நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் என்பது குறித்த தகவல்களை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.