இந்தியா

வங்கிகளின் அதீத நம்பிக்கையால் அதிகரித்த வாராகடன் : ரகுராம் ராஜன் அறிக்கை

rajakannan

வராக்கடன் அதிகரிப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்த கருத்து தொடர்பாக பாரதிய ஜனதா, காங்கிரஸ் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது.

நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு அவர் அளித்த அறிக்கையில், முடிவு எடுப்பதில் அரசின் மந்தம், வங்கிகளின் அதீத நம்பிக்கை, மந்தமான பொருளாதார வளர்ச்சி ஆகியவையே வராக்கடன் அதிகரிக்கக் காரணம் என தெரிவித்திருந்தார். இதைச் சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி, ரகுராம் ராஜனின் அறிக்கை மூலம் வராக்கடன் அதிகரிப்பதற்கு காங்கிரஸ் ஆட்சியே காரணம் என்பது தெளிவாகியிருப்பதாக குறிப்பிட்டார். 

2006 முதல் 2008 வரை வங்கிகளில் வராக்கடன் அதிகரித்தது என ரகுராம் ராஜன் கூறியதையும் சுட்டிக்காட்டினார். இதற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, பிரதமர் மோடி தனது பணக்கார நண்பர்களுக்கு அளித்த கடன்களாலேயே வராக்கடன் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியை விட்டுச் செல்லும் போது 2 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த வராக் கடன் தற்போது 10 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பது எப்படி என்றும் ரந்தீப் சுர்ஜிவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.