ஒற்றை காட்டு யானை 2 பேரை கொன்றதால் ஒடிசா மாநிலத்தின், மாவட்டம் ஒன்றில் பாதுகாப்புக்காக 600 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலம் கியோன்ஜார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை ஒன்று கொரி, தானாகாதி, சுகிந்தா பகுதிகளில் சுற்றி வருகிறது. இந்தக் காட்டு யானை அருகில் இருக்கும் காடுகளில் இருந்து நகருக்குள் வந்துள்ளது. வனத்துறையினர் பல முறை இந்த யானையை காட்டுக்குள் விரட்டியுள்ளனர். சுமார் 10 வயதுடைய அந்தக் காட்டு யானை அண்மையில் கொரி பகுதிக்குள் சென்றுள்ளது. இதனையடுத்து இந்தப் பகுதி மக்கள் விரட்டியடித்துள்ளனர்.
அப்போது அந்த யானை இரண்டு முதியோர்களை மிதித்துக் கொன்றது. இதனால் அச்சமடைந்த மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இப்போது அந்த யானை அதே பகுதிகளில் சுற்றி வருகிறது. அந்த யானையை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஒடிசாவில் யானை மனிதன் மோதல் வழக்கமானது என்றாலும் இம்முறை இந்தச் சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் இன்று ஒருநாள் மட்டும் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் குருஷ்ணா சந்திரா நாயக் கூறும்போது " ஒற்றை காட்டு யானை அருகில் இருக்கும் இடங்களில்தான் பதுங்கி இருக்கிறது. இதன் காரணமாக பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது. இதனால் இன்று ஒருநாள் மட்டும் 600 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளோம். ஒடிசா வரலாற்றிலேயே ஒரு மாவட்டத்தில் இத்தனை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது இதுவே முதல்முறை" என்றார் அவர்.