இந்தியா

'ஜெல்லி அட்டாக்' பீதியில் மும்பை மக்கள் !

'ஜெல்லி அட்டாக்' பீதியில் மும்பை மக்கள் !

இந்திய மாநகரங்களில் பரபரபரப்புக்கு பஞ்சமில்லாதது மும்பை. ஆனால் அந்த மும்பை மாநகரத்துக்கு அழகு சேர்ப்பது ஜூஹூ கடற்கரை. மும்பை மாநகர மக்கள் தங்கள் பொழுதை கழிப்பதற்காகவும் ஓய்வு எடுப்பதற்காகவும் வார நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் பெரும் கூட்டம் ஜூஹூ கடற்கரையில் கூடுவார்கள்.

ஆனால், இப்போது அந்தக் கடற்கரையில் கூடி பொழுதை கழிப்பதற்கு கூட மும்பை மக்கள் அஞ்சி நடுங்குகின்றனர். மும்பை மக்களின் அச்சத்துக்கு காரணம் ஜெல்லி மீன்கள் (Blue Bottle Jelly Fish). ஆம் இந்த ஜெல்லி மீன்கள் இப்போது மும்பை கடற்கரையில் ஏராளமாக காணப்படுகிறது. மேலும் கடந்த இரண்டு நாளில் 150-க்கும் மேற்பட்ட மக்களை ஜெல்லி மீன்கள் கடித்துள்ளது.

இதன் காரணமாக ஜெல்லி மீன்களால் காயம் ஏற்பட்டவர்களுக்கு அரிப்பு மற்றும் உடல் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மும்பை வாழ் மக்கள் கடற்கரைக்கு வர அச்சமடைந்துள்ளனர். பொதுவாக மும்பை கடற்கரைக்கு ஆண்டுக்கு சில மாதங்கள் ஜெல்லி மீன்கள் வருவது இயற்கையான நிகழ்வுதான், ஆனால் இம்முறை அதிகப்படியான ஜெல்லி மீன்கள் காணப்படுகின்றன.

இந்த ஜெல்லி மீன்கள் மாலை நேரத்தில் கடற்கரைக்கு வருபவர்களை தாக்கி கடிப்பதாக மும்பை வாசிகள் தெரிவிக்கின்றனர். உலகில் ஏராளமான ஜெல்லி மீன்கள் வகைகள் இருக்கின்றன. சில ஜெல்லி மீன்கள் கடித்தால் சில நிமிடங்களில் உயிர் கூட போய்விடும். ஆனால், மும்பையில் காணப்படும் இவ்வகையான ஜெல்லி மீன்கள் உயிரை குடிக்கும் வகையில் சேராது. கடலில் ஆழமான இடங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வகை ஜெல்லி மீன்கள் வாழ்கின்றன. அவை ஆழ்கடலில் மட்டுமே வாழும் தன்மை கொண்டவை.

மும்பை கடற்கைரயில் இருக்கும் ஜெல்லி மீன்கள் கடித்தால் சொறி, சிரங்கு, யானைக்கால் வியாதி, வாந்தி, பின் முதுகில் வலி, மார்பு வலி போன்றவற்றை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வகையான ஜெல்லி மீன்கள் கடித்தால், அந்த இடத்தில் முதலில் எலுமிச்சை சாறு விடவேண்டும். பின்பு, உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். ஜெல்லி மீன் தாக்குதல் காரணமாக ஜூஹூ கடற்கரைக்கு மக்கள் கூட்டம் வருவது குறைந்துவிட்டதாக, அங்கிருக்கும் சாலையோகர வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.