டெல்லி வன்முறை தொடர்பாக சுமார் 1,300 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அதன் மறுநாள் அதே இடத்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்ப்பட்டது. அந்த மோதல் டெல்லியின் பல இடங்களில் பரவி கலவரமாக வெடித்தது.
இந்த கலவரம் நாடு முழுவதும் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கோர நிலையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், வன்முறை நிகழ்ந்த பகுதிகள் தற்போது அமைதியை காண தொடங்கியுள்ளன. இந்த வன்முறையில் 46-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த வன்முறைக்கு காரணமானவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை 369 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் விசாரிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,284 என கூறப்பட்டுள்ளது. மேலும் வன்முறை தொடர்பாக வதந்தி பரப்பியதாக 40 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 5 நாட்களில் புதிதாக எந்த வன்முறையும் ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று நடந்த சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை 98 சதவிகிதம் பேர் எழுதியுள்ளனர்.