இந்தியா

`அதிக தற்கொலை பதிவாகும் மாநிலங்களில் தமிழகத்துக்கு இரண்டாவது இடம்’ - என்.சி.ஆர்.பி தகவல்

நிவேதா ஜெகராஜா

2021-ம் ஆண்டில் இந்திய அளவில் நடந்த தற்கொலைகளில் அதிக தற்கொலை பதிவான மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2021-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 18,295 தற்கொலைகள் பதிவாகியிருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு முன் முதலிடத்தில் மஹாராஷ்ட்ரா உள்ளது. அங்கு 22,207 தற்கொலைகள் பதிவாகியிருந்துள்ளன. இந்திய அளவில் பதிவான தற்கொலைகளில், 11.5% தற்கொலைகள் தமிழ்நாட்டில் தான் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் பதிவான தற்கொலைகளில் 8,073 குடும்ப பிரச்னைகளினால் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்வோரில் தமிழ்நாட்டினரே அதிகமாக உள்ளனர். இதேபோல உடல்சார்ந்த பிரச்னைகளால் தற்கொலை செய்வோர் பட்டியலிலும் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.

அந்த அறிக்கையின்படி, நாடு முழுவதும் தற்கொலை செய்வோரில் தினக்கூலிகள் 25.6% பேரும், அலுவல் பணிக்கு செல்லா குடும்பத்தலைவிகள் 14.1% பேரும், சுய தொழில் செய்வோரில் 12.3% பேரும், 9.7% வேலைக்கு செல்வோரும், 8.4% வேலைக்கு செல்லாதோரும், 8% மாணவர்களும் தற்கொலைக்கு முயல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.