இந்தியா

என்னை ஏன் பெற்றீர்கள் ? நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இளைஞர் முடிவு ?

என்னை ஏன் பெற்றீர்கள் ? நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இளைஞர் முடிவு ?

webteam

விரைவில் நமது நீதிமன்றம் ஒரு வித்தியாசமான வழக்கை சந்திக்க இருக்கிறது. ஆம், பெற்றோர்கள் மீது பிள்ளைகள் சொத்தை பிரித்து கொடுக்க சொல்லியும் அல்லது வேறு பல காரணங்களை கூறி வழக்கு தொடர்வதை நாம் பலமுறை கேள்விப்பட்டுள்ளோம். 

ஆனால், மகனே ‘ஏன் என்னை பெற்றீர்கள் என பெற்றோர் மீது வழக்கு தொடரவுள்ளதாக கூறினால்? இந்த உலகம் வியக்காதா என்ன? இப்படி முடிவை அறிவித்துள்ளார் ரபேல் சாமுவேல். யார் இவர்?

ரபேல் சாமுவேல் தீவிரமான ‘ஆண்ட்டிநாட்டலிசம்’(antinatalism)என்ற புதியவகை சிந்தனை மீது ஈர்ப்பு உள்ளவர். அண்டிநாட்டலிசமா? அப்படியென்றால்? பெற்றோர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு ஒருவகை எதிரானது சிந்தனை போக்கை கொண்டவர்களை குறிக்கும் சொல்தான் இந்த ‘ஆண்ட்டிநாட்டலிசம்’.

அதாவது இனப்பெருக்கம் என்பதே பூமிக்கு தேவை இல்லாத செயல் என சொல்கிறது இந்தச் சிந்தனை. அதை சொல்வதோடு இல்லாமல் ஒரு இயக்கமாக உலகம் முழுவதும் இதற்கான செயற்பாட்டாளர்களை உருவாக்கி வைத்துள்ளது என்றே கூறலாம்.  இந்தத தீவிர சிந்தனை தாக்கத்தால் ஈர்க்கப்பட்டதான் சாமுவேல்.

பெற்றோர்கள் தங்களின் தேவைக்காகவும், தங்களின் மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே குழந்தைகளை பெற்று கொள்ளுகிறார்கள். ஆகவே இது முற்றிலும் தவறான ஒன்று. பெற்றோர்களின் முடிவிற்காகவும் அவர்களின் கட்டாய விருப்பத்திற்காகவும்  பிள்ளைகள் பணியாற்ற அவசியமில்லை என கூறுகிறது இந்தச் சிந்தனை. 

மேலும், “ஒவ்வொரு குழந்தையும் தங்களின் வாழ்வை அனுபவிக்கவே இந்தப் பூமிக்கு வருகிறார்கள். அவர்களை பெற்றோர்களின் ஆசைகளுக்காக வாழ வலியுறுத்துவது முறையல்ல; அவர்களின் கனவை பிள்ளைகள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என எதிர்ப்பார்ப்பதும் தவறான ஒன்றுதான்” என இந்தச் சிந்தனை சில தீர்மானங்களை முன்வைக்கிறது. பெற்றோர்கள் குழந்தைகளின் விருப்பம் அறிந்து அவர்களை வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் இந்தச் சிந்தனை வலியுறுத்துகிறது என்கிறார் சாமுவேல்.

கலில் ஜிப்ரான் சொல்வதை போல, “உங்கள் குழந்தைகள் உங்களால் தோன்றியவர்கள், உங்களிடமிருந்து அல்ல’ என ஒருவரி கவிதையின் மையத்தைதான் சாமுவேல் புதிய வகையான சிந்தனை மூலம் நமக்கும் உலகிற்கும் நீதிமன்றத்திற்கும் எடுத்து கூற இருக்கிறார் என இதனை சுறுக்கமாக நாம் புரிந்து கொள்ளலாம். 

இவ்வளவு பெரிய விவாதத்தை எழுப்பியுள்ள சாமுவேலின் கருத்தை பற்றி அவரது தாய் கவிதா, சில விளக்கங்களை முன்வைத்துள்ளார். நான் என் மகனின் சிந்தனையை மதிக்கிறேன். ஆனால் அவன் எங்கள் மீது தொடர உள்ள வழக்கை நாங்கள் 
நீதிமன்றத்தில் சந்திப்போம்.

நாங்கள் இருவருமே வழக்கறிஞர்கள்தான். சாமுவேலின் கருத்திற்கு தெளிவான ஒரு விளக்கத்தை நீதிமன்றத்தில் அவன் தந்தால், நாங்கள் எங்களுடைய தவறு என்ன புரிந்துகொண்டு பின் ஒப்பு கொள்வோம். அவனின் ஆண்ட்டிநாட்டலிசம் சிந்தனை அடிப்படையில் குழந்தைளை பெற்று கொள்வது பூமிக்கு தேவையில்லாத பாரம் என்று கூறுகிறது. அவன் இப்படி தனக்கான சிந்தனையோடு  துணிச்சலாக நிற்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் அவன் மகிழ்ச்சிகான பாதையை அவனே கண்டடைவான் என அவர் தன் மகனின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒரு குடும்ப சிக்கலாக இருந்த இந்தப் பிரச்னை இப்போது ஒரு மனித குலத்தின் பிரச்னையாக உருவெடுத்து உள்ளது. குழந்தையே பெற்றுக் கொள்ளக் கூடாது என்றால் இந்த உலகம் எப்படி அடுத்தடுத்த புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி பயணிக்க முடியும்? அல்லது பயன்பெற முடியும்? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் சாமுவேல் நீதிமன்றத்தில் முன்வைக்க உள்ள பதில்கள்தான் விளக்கத்தை தரகூடும்.