இந்தியா

ஒடிசா: சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆதரவற்றோர் இல்ல மேலாளர் கைது, இல்லத்துக்கு சீல்

Veeramani

ஒடிசாவின் ஜார்சுகுடா மாவட்டத்தில் ஆதரவற்றோர் இல்லத்தை நிர்வகித்து வரும் பிரிட்டிஷ்  நாட்டைச்  சேர்ந்த  ஜான் பேட்ரிக் பிரிட்ஜ்,  அந்த இல்லத்திலிருந்த சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது  குழந்தைகள் உரிமை பாதுகாப்பு வழிகாட்டுதல்களின் கீழ் அந்த ஆதரவற்றோர்  இல்லத்துக்கு ஜார்சுகுடா மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

ஜார்சுகுடா நகரத்தின் காக்ஸ் காலனி பகுதியில் அமைந்துள்ள ஃபெய்த் அவுட்ரீச் என்ற இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் சுமார் 400 குழந்தைகள் தங்கியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த ஆதரவற்றோர் இல்ல மேலாளர் ஜான் பேட்ரிக் பிரிட்ஜ், தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பேட்ரிக் பிரிட்ஜ் மீது போக்சோ சட்டம் மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் கீழ வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் இவர் மீது நியூசிலாந்தில் இயங்கும்  நிதி நிறுவனத்தால்  வழங்கப்பட்ட நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான மற்றொரு  நிதிமோசடி விசாரணையும் நடந்து வருகிறது.   இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய குடியுரிமையைப் பெற்ற பிரிட்ஜ் மற்றும் அவரது மனைவியால் இந்த ஆதரவற்றோர் இல்லம் நிறுவப்பட்டது, இங்கு தங்குமிடம் மற்றும் கல்வி இரண்டும் வழங்கப்படுகிறது.

இதேபோன்ற சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல் வழக்கில்,ஒடிசாவின் தெங்கனல் மாவட்டத்தில் குட் நியூஸ் இந்தியா ட்ரீம் சென்டர் என்ற பெயரில் குழந்தை தங்குமிடம் நடத்திய ஆயர் பைஸ் ரஹ்மான்  என்பவர் 2018 இல் கைது செய்யப்பட்டார்.