இந்தியா

மோர்பி பாலம் புனரமைப்பில் இத்தனை கோடிகள் ஊழலா? - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Abinaya

குஜராத் மோர்பி பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில், நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. விசாரணையில், பாலம் புனரமைப்பு பணிகளுக்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் ரூ.12 லட்சத்தை மட்டும் தான் செலவிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அமைக்கப்பட்டிருந்து. இந்த பாலத்தை சீரமைக்கும் பணி 6 மாதங்களாக நடைப்பெற்று, கடந்த 26ஆம் தேதி திறக்கப்பட்டது. பாலம் சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது முதல் மக்கள் பாலத்தைச்சென்று பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி, பாலம் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் 140க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, புதிதாக சீரமைக்கப்பட்ட பாலம் எப்படி அறுந்து விழுந்தது என தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், ’ஒரேவா’ குழுமத்தைச் சேர்ந்த ஜெயுஷ் பட்டேல் என்பவரிடம், 15 வருடத்திற்கு இந்த பாலத்தின் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டிற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகளும் இதே நிறுவனத்திடம் தான் ஒப்படைக்கப்பட்டிருந்த சூழலில், 100 ஆண்டுகள் பழமையான பாலத்திற்கு மேம்போக்காக சில வேலைகளை செய்துவிட்டு வண்ணம் பூசிவிட்டு புனரமைப்பு பணிகள் முடிந்ததாகக்கூறி பாலம் திறக்கப்பட்டது.

இந்த புனரமைப்பு பணிகளுக்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஊழல் முறைகேட்டில் அந்நிறுவனம் ஈடுப்பட்டத்தில் பால புனரமைப்பு பணிகளுக்காக வெறும் ரூ.12 லட்சத்தை மட்டும் அந்நிறுவனம் செலவிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்செய்தி குஜராத் மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.