இந்தியா

கேரளாவில் அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை ஒழித்து கலப்பு பள்ளிகளாக்க உத்தரவு!

ச. முத்துகிருஷ்ணன்

கேரளாவில் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை ஒழித்து அனைத்து பள்ளிகளையும் கலப்பு பள்ளிகளாக மாற்ற மாநில கல்வித்துறைக்கு குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொல்லம் மாவட்டம் அஞ்சலைச் சேர்ந்த மருத்துவர் ஐசக் பால் கேரள மாநில குழந்தை உரிமைகள் ஆணையத்தில் இது தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரிந்த ஆணையம், அனைத்து ஆண்கள் மட்டும் மற்றும் பெண்கள் மட்டும் பள்ளிகளை ஒழித்து அனைத்தையும் இணைப்பள்ளிகளாக (Co-Education) மாற்ற மாநில கல்வித்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாலின அடிப்படையிலான பிரிவினையை தடுப்பது அவசியம் என்றும் பாலின சமத்துவத்தை உறுதி செய்வதும் அவசியம் என்றும் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இந்த மாற்றம் அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வர வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தற்போது கேரளாவில் 280 பெண்கள் பள்ளிகளும், 164 ஆண்கள் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. அடுத்த கல்வியாண்டு முதல் இந்த அனைத்து பள்ளிகளிலும் அனைத்து பாலின மாணவர்களுக்கும் சேர்க்கை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது ஆணையம்.

இணைப்பள்ளிகளாக மாற்றப்படுவதற்கு முன்பு பள்ளிகளில் உள்ள கழிவறை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இணைக்கல்வியின் அவசியம் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. அடுத்தக் கல்வியாண்டு முதல் இணைக்கல்வியை அமல்படுத்த 90 நாட்களில் செயல்திட்டத்தை உருவாக்குமாறு கல்வித்துறையின் முதன்மை செயலாளர், பொதுக்கல்வி இயக்குநர் உள்ளிட்டோருக்கு குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.