விவசாயிகள் பிரச்னையில் அரசு செயல்பட தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இன்று காலை மக்களவை கூடியவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று விவசாயிகள் பிரச்னை தொடர்பாக பிரதமர் பதிலளிக்கவேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் இந்த பிரச்னை தொடர்பாக மக்களவையில் நேற்றிரவு வரை விவாதம் நடைபெற்று முடிந்திருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த்குமார் கூறினார். எனினும் அவையில் கூச்சல் தொடர்ந்ததால் சபாநாயகர் அவையை முதலில் காலை 11:30 மணி வரையும், பின்னர் நண்பகல் 12 மணி வரையும் ஒத்திவைத்தார்.
பின்னர் மக்களவை மீண்டும் தொடங்கியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர். அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்த உறுப்பினர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.