Central Vista Twitter
இந்தியா

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா - 19 எதிர்கட்சிகள் புறக்கணிப்பு! கூட்டறிக்கை சொல்வதென்ன?

“குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்காமல் பிரதமர் நரேந்திர மோடி தானாகவே புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைப்பது, அவமானம் மட்டுமல்ல; இந்திய ஜனநாயகத்தின் மீது நேரடி தாக்குதல்!”- எதிர்க்கட்சிகள்

PT WEB

“குடியரசு தலைவரை அழைக்காமல் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைப்பது ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல்” என கண்டனம் தெரிவித்து 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதாக கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

வருமே 28ஆம் தேதி நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார். ஆனால் மரபு படி குடியரசுத் தலைவர் தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் 19 எதிர்கட்சிகள் இன்று கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

New Parliament and Modi

இந்த அறிக்கையில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, தேசிய மாநாட்டு கட்சி, கேரளா காங்கிரஸ், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், ராஷ்டிரிய லோக் தள் ஆகிய கட்சிகள் கையொப்பமிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்காமல், பிரதமர் நரேந்திர மோடி தானாகவே புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைப்பது, அவமானம் மட்டுமல்ல; இந்திய ஜனநாயகத்தின் மீது நேரடி தாக்குதல். நாட்டின் ஜனாதிபதி இல்லாமல் நாடாளுமன்றம் இயங்க முடியாது. ஆனால் புதிய நாடாளுமன்றத்தின் கட்டட திறப்பு விழாவிலேயே குடியரசுத் தலைவர் இல்லை. அவர் இல்லாமலே திறப்பு விழாவை நடத்துவது கண்ணியமற்ற செயல். பிரதமரின் இச்செயல் குடியரசுத் தலைவருக்கான பதவியை அவமதிப்பது மட்டுமின்றி இந்திய அரசியலமைப்பின் உணர்வை மீறுவதாகவும் உள்ளது” என குற்றம் சாட்டியுள்ளனர்.

New Parliament

மேலும் “புதிய நாடாளுமன்ற கட்டடம் பெருந்தொற்றுகளுக்கு இடையேவும் பொருளாதார நெருக்கடிக்கு இடையேவும் நாட்டின் குடிமக்களையோ அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையோ கலந்தாலோசிக்காமல் பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் உள்ள செயலை கண்டிக்கும் வகையில் நாடாளுமன்ற திறப்பு விழாவில் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் பங்கேற்காது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.