இந்தியாவில் கணினிகளில் பதிவாகும் தகவல்களை கண்காணிக்க 10 அமைப்புகளுக்கு மத்திய அரசு அதிகாரமளித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இப்போது கணினி இல்லாமல் எந்த வேலையும் ஓடாது. வீடுகள், அலுவலகங்கள் என அனைத்தையும் கணினிகளே ஆக்கிரமித்துள்ளன. தனிப்பட்ட விவரங்களையும் அவரவர் கணினியில் நாம் சேமித்து வைத்திருப்போம். இந்நிலையில் நாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் சேகரிக்கப்படும் விவரங்களை கண்காணிக்கவும், பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை இடைமறித்து பார்க்கவும், அதனை தடுக்கவும் 10 பாதுகாப்பு அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உளவுத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் இந்த அதிகாரத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள எந்தவொரு நபரின் கணினியையும் கண்காணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம், அகமது படேல் உள்ளிட்டோர் தங்களுடையை அதிருப்தியை பதிவு செய்துள்ளனர். ஆனாலும் நாட்டின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது.
கணினிக்கு சொந்தக்காரர் அல்லது கணினிக்கு இணைய சேவை வழங்கும் சேவை வழங்குநர், இந்த 10 பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் எந்த விவரங்களையும் அளிக்க வேண்டும். மீறி அளிக்கத் தவறினால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரகசியம் என்று எதுவும் வைக்கக்கூடாதா..?
உங்களது கணிணியில் நீங்கள் எதை வேண்டுமானாலும் சேமித்து வைத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு உங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை கூட சேமித்து வைத்திருக்கலாம். அதனை நீங்கள் மற்றவர்களுக்கு காட்ட வேண்டிய அவசியமில்லை. அது உங்கள் சொந்த விருப்பம். ஆனால் அதனையே மற்றவர்கள் உங்களுக்கே தெரியாமல் அதனை கண்காணிப்பது நாட்டில் அந்தரங்கம், சுதந்திரம் ஆகியவற்றை கேள்விக்குறிக்கு ஆளாக்குவதாக மக்கள் கருதுகின்றனர். 10 அமைப்புகள் உங்களை எந்தநேரமும் சிசிடிவியை போல கண்காணித்துக் கொண்டிருப்பது என்பதை எக்காலத்திலும் ஏற்க முடியாது எனவும் சிலர் தெரிவிக்கின்றனர். வெளிநாடுகளில் இதேபோன்ற கண்காணிப்பு இருந்தாலும் இந்தியா போன்ற நாடுகளில் இதுதேவையில்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
மக்களின் மனநிலையை அறிய முடியும்
அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை பயன்படுத்தி மக்களின் மனநிலையை அறிய பாதுகாப்பு அமைப்புகள் முயற்சிக்கலாம் என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. நீங்கள் தொடர்ச்சியாக ஒரு கருத்தை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்தை எதிர்க்கிறீர்கள் என்றால் உங்களின் மனநிலையை அரசால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதனை பயன்படுத்தி தேர்தலில் சாதகமான பரப்புரையை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் நாட்டில் இருக்கும் அனைத்து மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு எளிதாக தேர்தலில் அரசால் வெற்றி பெற முடியும் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
தனியுரிமை, சுதந்திரம், ரகசியம் காப்பது என்பது ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் அத்யாவசியமான ஒன்று. ஆனால் அதனையெல்லாம் ஒரு அமைப்புகள் கவனித்தால் கூட பரவாயில்லை. 10 அமைப்புகளுக்கு அதனை கண்காணிக்க அங்கீகாரம் வழங்க அவசியம் என்ன என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.
வலுக்கும் எதிர்ப்புகள்..
மத்திய உள்துறை அமைச்சகத்தில் இந்த அறிவிப்பிற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தள்ளன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்த் ஷர்மா கூறும்போது, இது ஜனநாயத்திற்கு எதிரான போக்கு என தெரிவித்துள்ளார். அத்துடன் அடிப்படை மற்றும் தனிமனித உரிமைக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ராம் கோபால் யாதவ், அரசின் இந்த அனுமதி அரசியலமைப்பு திட்டத்திற்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார். இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசு இதுபோன்ற நகர்வுகளை தற்போது நிறுத்தி வைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சீதாராம் யெச்சூரி கூறும்போது, “ இந்திய அரசாங்கத்தில் உள்ள அனைவரும் ஏன் ஒரு குற்றவாளி போல பார்க்கப்படுகின்றனர்..? அரசாங்கம் இதன் மூலம ஒவ்வொரு இந்திய குடிமக்களையும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக வேவு பார்க்க முயற்சிப்பதாக சாடியுள்ளார். தொடர்ச்சியாக பலரும் அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.