பல்வேறு மாநிலங்களில் விமான நிலையங்கள் மூடல் pt web
இந்தியா

OPERATION SINDOOR : பஞ்சாப்பில் அதிகரிக்கப்படும் பாதுகாப்பு.. பல மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் மூடல்

அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

அங்கேஷ்வர்

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடித்துள்ள இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்திய நிலைகளைக் குறிவைத்து வந்த பாகிஸ்தானின் 3 விமானங்களை இந்தியப் படைகள் சுட்டு வீழ்த்தின. பாகிஸ்தானின் எஃப்16, ஜேஎஃப்17 ஆகிய போர் விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் விமானத்திலிருந்து வெளியேறிய விமானி ராஜஸ்தான் ஜெய்சால்மர் எல்லை அருகே உயிருடன் பிடிபட்டுள்ளார்.

இந்தியா பதிலடி

பஞ்சாபில் உள்ள பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. மாறி வரும் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இம்முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ் தெரிவித்துள்ளார். ஏனெனில் பாகிஸ்தானுடன் 532 கிமீ எல்லையை பஞ்சாப் மாநிலம் பகிர்ந்து கொண்டுள்ளது. மாநிலத்திலுள்ள அனைத்து காவல்துறையினரின் விடுமுறைகளையும் ரத்து செய்து அனைவரும் பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அண்டை மாநிலமான ஹரியானாவிலும் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் விடுமுறைகளை ரத்து செய்துள்ளது அம்மாநில அரசு. அனைத்து அதிகாரிகளும் அவசர நிலைக்குத் தயாராக இருக்கும்படி உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல், குஜராத், டெல்லி போன்ற பல மாநிலங்களில் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பள்ளி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சண்டிகரிலும் இரு நாட்களுக்கு பள்ளிகள் மட்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதிலுமுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, பயணிகள் சுமார் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஒன்றையும் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.