கோயில் திறப்பை ஒட்டி நடக்கும் மோசடிகள்
கோயில் திறப்பை ஒட்டி நடக்கும் மோசடிகள் pt web
இந்தியா

அயோத்தி ராமர் கோயில் திறப்பை பயன்படுத்தி நடக்கும் மோசடி

Angeshwar G

ராமர் கோயில் திறப்பு விழா நாடெங்கும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்நிலையில் ராமர் கோயிலில் விஐபி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்கிறோம் என்று கூறியும், பிரசாத விநியோகத்திற்கு நன்கொடை அளிக்குமாறும் வாட்ஸ்ஆப்பில் இணையதள லிங்குகள் அனுப்பப்படுகின்றன. இவற்றுக்கும் கோயில் நிர்வாகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில் மோசடி தகவல்களை நம்பி பலர் தங்கள் பணத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மோசடியான தகவல்களை நம்பி ஏமாறாதீர்கள் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் செக்யூரிட்டி பிரிவு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ராமர் கோயில் பெயரை பயன்படுத்தி மோசடிகள் நடைபெறுவதை தடுக்க குழு ஒன்றை அமைத்து அதை அயோத்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. இதில் இணையதள தொழில்நுட்ப நிபுணர்கள், மத்திய மின்னணு அமைச்சக அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

மோசடியை பொறுத்தவரை, செல்போனுக்கு வந்துள்ள இணைப்பை க்ளிக் செய்ததும், பயனாளிகள் தங்களது விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவார்கள். தொலைபேசி எண்ணை பதிவிட்டதும் அந்த எண் இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கு விவரங்கள் வரை அனைத்தையும் எடுத்துவிடுவார்கள் என அதிர்ச்சி கிளப்புகின்றனர் காவல்துறையினர்.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து தேசிய சைபர் ஹெல்ப்லைன் (1930) அல்லது cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகாரளிக்குமாறும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கிடையே அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் என்ற பெயரில் இனிப்புகள் உள்ளிட்ட தின்பண்டங்களை விற்பதாக கூறி அளிக்கப்பட்ட புகாரில் அமேசான் நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீசில், 'ஸ்ரீ ராம் மந்திர் அயோத்தியா பிரசாத்' என்ற பெயரில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவேண்டும் என்றும் இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த ஆணையம் எச்சரித்துள்ளது.

இதுமட்டுமின்றி ‘ஸ்ரீ ராம ஜென்ம பூமியின் பிரத்யேக, நேரலைப் புகைப்படங்கள்’ என்ற இணைப்பும் பரவலாக பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுபோன்ற இணைப்பை திறக்க வேண்டாம். இதன்மூலம் உங்கள் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு வங்கிக்கணக்குகள் கொள்ளை அடிக்கப்படும் அபாயம் இருப்பதாக காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.

ஏமாற்றுபவர்களின் எளிய இலக்காக மூத்த குடிமக்களே இருப்பதாகவும் அவர்களிடம் இது குறித்து விளக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளனர்.