இந்தியா

கொரோனா முன்னெச்சரிக்கை தமிழகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

கொரோனா முன்னெச்சரிக்கை தமிழகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

webteam

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையடுத்‌து, உடல்நலக் குறைவு ஏற்படும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை எனவும், இது குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் அச்சத்தால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய 1,292 பேர் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை விமான நிலையங்களில் இதுவரை 96,729 பயணிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 1,292 பேர் வீடுகளிலேயே வைத்து கண்காணிக்கப்படுகின்றனர். அதிகப்பட்சமாக சென்னையில் 426 பேரின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அதில் எந்நேரத்திலும் அவர்களை தொடர்பு கொள்வதற்கான தொலைப்பேசி எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது.