65 வருட சட்டசபை தேர்தல் வரலாற்றில், உத்தரப் பிரதேசத்தில் இதுவரை இரண்டு முதல்வர்கள் மட்டும்தான் 5 வருட பதவி காலத்தை நிறைவு செய்துள்ளனர்.
2012-ல் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதிதான் முதல் முறையாக ஐந்து வருடங்கள் உத்தர பிரதேசத்தில் முதலமைச்சராக தன் பதவி காலத்தை முழுமையாக முடித்தவர். அதன் பிறகு, இப்போது இரண்டாவதாக சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் ஐந்து ஆண்டுகள் முதலமைச்சராக இருந்துள்ளார்.
1952-ல் நடந்த முதல் தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று கோவிந்த் பாண்ட் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், 1955-ம் ஆண்டு அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதால், அவரை அடுத்து சம்பூர்ணானந்த் முதலமைச்சரானர். இதுபோல காங்கிரஸ் கட்சி முதலமைச்சரை மாற்றி கொண்டே இருந்ததால் யாரும் ஐந்து வருடங்கள் முதலமைச்சராக இருந்து தனது முழு பதவி காலத்தை முடிக்கவில்லை.
1967-ம் ஆண்டு பாரதிய கிராந்தி தல், ஜன சங், பிரஜா சோசலிஸ்ட் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி மற்றும் சுதந்திரா கட்சி இணைந்து அமைத்த கூட்டணி முதன் முறையாக காங்கிரஸ் கட்சியை உத்தர பிரதேசத்தில் வீழ்த்தி ஆட்சியை பிடித்தது. சரண் சிங் முதலமைச்சரானர். ஆனால் அந்த கூட்டணி நிலைக்காமல், ஒரு வருடத்தில் ஆட்சி கலைந்தது.
அதன் பிறகு 1969-ம் ஆண்டு நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி 211 இடங்களில் வென்று பெரும்பான்மைக்கு 2 இடங்கள் குறைவாக இருந்தது. மற்ற கட்சிகளின் துணையோடு அந்த ஆண்டு காங்கிரஸ் அமைத்த ஆட்சியும் நிலைக்கவில்லை.
1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனதா கட்சி பெரும்பான்மை பெற்றது. ஆனால் 1980-ம் ஆண்டு இந்திரா காந்தி மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு ஜனதா கட்சியின் ஆட்சி கலைக்கப்பட்டது.
1980-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால் நிலையான முதலமைச்சர் இல்லை. 1993-ம் ஆண்டு வரை இவ்வாறு முதலமைச்சர்கள் மாறி கொண்டே இருந்தனர்.
1993-ம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி பெரும் சக்திகளாக உருவெடுத்தன. அந்த ஆண்டு இவ்விரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சியை வீழ்த்தின. ஆனால் இந்த கூட்டணியும் நிலைக்கவில்லை.
இவ்வாறு நிலையான முதலமைச்சரும், நிலையான ஆட்சியும் இல்லாமலே உத்தர பிரதேச மாநிலம் இருந்தது.
அதன் பிறகு 2007-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி 2012-ம் தேர்தல் வரும் ஆண்டு வரை முழுமையாக முதலமைச்சர் பதவியில் இருந்தார். இவர் தான் ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்த முதல் முதலமைச்சர்.
அதன் பிறகு 2012-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சமாஜ்வாதி கட்சி, அகிலேஷ் யாதவை முதலமைச்சராக தேர்வு செய்தது. இவரும் தற்போது ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்து தேர்தலை சந்தித்தார்.
தற்போது நடந்த தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி 284 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.