ராணுவத் துறையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மொபைல் ஃபோன்களை மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ராணுவம் தொடர்பான தகவல்களின் ரகசியத்தன்மையை உறுதி செய்வதற்காக உள்நாட்டில் தயாரிக்கப்படும் மொபைல் ஃபோன்களை மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டு மொபைல் ஃபோன்கள் மூலம் வாடிக்கையாளர் குறித்த தகவல்களை சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள சர்வர்களில் ஃபோன் நிறுவனங்கள் சேமித்து வைப்பதால், தகவல் திருட்டு உள்ளிட்ட ஆபத்துகள் இருப்பதாக டெல்லியில் ராணுவ உயரதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். எனவே, உள்நாட்டு மொபைல் ஃபோன்களை மட்டுமே ராணுவம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் பயன்படுத்துவது குறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடர்ந்து, இந்திய மொபைல் ஃபோன்களை மட்டும் உபயோகப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்டமாக ராணுவத் துறையில் இதை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.