திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள ஏழு மலைகளும் தேவஸ்தானத்திற்கு மட்டுமே சொந்தமானது என்றும், அதனை வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது எனவும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்தினருடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம் மேற்கொண்டார்.
பின்னர் அங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி, அவர்களுடன் அமர்ந்து அவர் உணவு உட்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய
சந்திரபாபு நாயுடு, "திருமலை கோயிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். தற்போது பிற மதங்களைச் சேர்ந்த நபர்கள் அங்கு பணிபுரிந்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள். நாட்டின் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்கள் கட்டப்படும். வெளிநாடுகளிலும் வெங்கடேஸ்வர சுவாமியின் கோயில்கள் நிறுவப்பட வேண்டும் என பல பக்தர்கள் விரும்புகிறார்கள்.
ஏழு மலை பகுதிக்கு அருகில் வணிகமயமாக்கல் கூடாது. இந்தப் பகுதியை ஒட்டி மும்தாஜ் ஹோட்டலுக்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டது. 35.32 ஏக்கர் நிலப்பரப்பில் கட்ட திட்டமிடப்பட்ட ஹோட்டலுக்கான ஒப்புதலை ரத்து செய்ய அரசாங்கம் இப்போது முடிவு செய்துள்ளது. ஹோட்டல் நிர்வாகம் சைவ உணவு மட்டுமே வழங்க முன்மொழிந்திருந்தாலும், இந்தப் பகுதியில் எந்தவொரு தனி நபருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
24 கிளேமோர் கண்ணிவெடிகளால் நான் குறிவைக்கப்பட்டேன். அத்தகைய தாக்குதலில் இருந்து தப்பிப்பது சாத்தியமற்றது. ஆனால், நான் வெங்கடேஸ்வரரின் தெய்வீக அருளால் மட்டுமே உயிர் பிழைத்தேன். இவ்வளவு பெரிய குண்டுவெடிப்பில் இருந்து நான் தப்பித்தேன் என்பது இறைவனின் மகத்தான சக்தியை நிரூபிக்கிறது " என தெரிவித்தார்.