இந்தியா

சபரிமலை மண்டலப் பூஜை: தொடங்கியது ஆன்லைன் முன்பதிவு !

jagadeesh

சபரிமலையில் மண்டல கால பூஜைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன் ஐப்பசி மாத பூஜைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன், ஆன்லைனில் முன்பதிவு செய்த 250 பக்தர்கள் மட்டுமே தினசரி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நவம்பர் 15 ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. இதனையடுத்து நவம்பர் 16 முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகிறது. மண்டலக் காலத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 1000 பக்தர்களும் சனி, ஞாயிறு நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களும், மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தினத்தில் 5 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.

மண்டல பூஜையின்போது https://sabarimalaonline.org/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் முன் பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். முன்பதிவு செய்யும்போது கொரோனா நெகட்டிவ் சான்றிதழை இணைக்க தேவையில்லை. பத்தனம்திட்டா மாவட்டத்தில் பல இடங்களிலும் நிலக்கல், பம்பையிலும் கொரோனா பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பம்பை, சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க முடியாது. சபரிமலையில் பணிக்கு வரும் அனைவருக்கும் கொரோனா சான்றிதழ் கட்டாயம். சபரிமலைக்கு பக்தர்களை பம்பையில்  இறக்கிவிட்டு நிலக்கலுக்கு வாகனங்களை கொண்டு செல்ல வேண்டும். பம்பை நதியில் குளிக்க அனுமதியில்லை. பம்பை ஆற்றின் கரையில் ஷவர் வசதி ஏற்படுத்தப்படும். நிலக்கல், சன்னிதானம், பம்பையில் அன்னதானம் வழங்கப்படும்.