எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் இருந்த நிலையில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த ஆன்லைன் கேமிங் தடை மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
ஆன்லைன் கேம்கள் தடை மற்றும் ஒழுங்குபடுத்தும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிமுகப்படுத்தினார். பணம் வைத்து விளையாடப்படும் ஆன்லைன் கேம்களை இச்சட்டம் முழுமையாக தடை செய்கிறது. இத்தவறை செய்பவர்களுக்கு அபராதம், சிறை உள்ளிட்ட தண்டனைகளும் விதிக்கப்படும். அத்துடன் பிற வகை ஆன்லைன் கேம்களுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன.
பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை ஒட்டுமொத்தமாக தடை செய்வது மத்திய அரசின் மற்றுமொரு மோசமான கொள்கை முடிவு என்றும் இது மாநில அரசுகளின் வருவாயை பாதிக்கும் என்றும் கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியுள்ளார். இதற்கிடையே பணம் அடிப்படையிலான ஆன்லைன் கேம்களுக்கு தடை விதிக்கும் திட்டத்தை கைவிடக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அச்சேவையை வழங்கும் நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளன.
இது பல்லாயிரக்கணக்கானோருக்கு வாழ்வாதாரமாக உள்ள தொழில்துறைக்கு சாவு மணியாக அமையும் என அவர்கள் கூறியுள்ளனர். மேலும் இத்துறையால் அரசுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைப்பதாகவும் அவை கூறியுள்ளனர்.
இந்த மசோதா ஆன்லைன் பண விளையாட்டு அல்லது அதன் விளம்பரங்களைத் தடைசெய்கிறது மற்றும் அவற்றை வழங்குபவர்களுக்கு அல்லது விளம்பரப்படுத்துபவர்களுக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க பரிந்துரைக்கிறது. இது அத்தகைய விளையாட்டுகளை eSports அல்லது ஆன்லைன் சமூக விளையாட்டுகளிலிருந்து வேறுபடுத்த முயல்கிறது. இந்த மசோதா மின் விளையாட்டுகள் மற்றும் ஆன்லைன் சமூக விளையாட்டுகளை மேம்படுத்துவதற்கும் அழைப்பு விடுக்கிறது.