இந்தியா

நவம்பர் 8 கறுப்பு தினமாக கடைப்பிடிக்கும் எதிர்க்கட்சிகள்

நவம்பர் 8 கறுப்பு தினமாக கடைப்பிடிக்கும் எதிர்க்கட்சிகள்

webteam

இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய உயர் மதிப்புடைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி வெளியிட்ட இந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பால் நாடே அதிர்ந்தது. உயர் மதிப்புடைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியான மறுநாள் அதாவது நவம்பர் 9ம் தேதி நாடெங்கும் அனைத்து வங்கிகளும், ஏடிஎம்களும் மூடப்பட்டன. இதையடுத்து ‌10ம் தேதி தான் வங்கிகள் ‌திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பு‌திய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க வசதியாக 11-ம் தேதி முதல் ஏடிஎம்களில் மாற்றம் செய்யப்பட்டு பொது மக்‌கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டன.  வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் பணம் எடுப்பதற்காக உச்ச வரம்பும் நிர்ணயிக்கப்பட்டது. ஒருவரே பல முறை வந்து பணம் எடுப்பதை தடுப்பதற்காக விரலில் மை வைக்கும் அறிவிப்பு நவம்பர் 15ம் தேதி வெளியானது. பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து புதியவற்றை வாங்கிக் கொள்வது நவம்பர் 24ம் தேதியுடன் திடீரென முடிவுக்கு வந்தது. பிரதமர் மோடியின் அறிவிப்பு நாட்டின் ஒவ்வொரு குடிமகனி‌டமும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நாளை கறுப்பு தினமாக அனுசரிக்கப்போவதாக காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இன்றைய தினம் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் அறிவிப்புக்கு பதிலடியாக, கறுப்புப்பண ஒழிப்பு தினமாக மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. இன்றைய தினத்தில் பா.ஜ.க. தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் முக்கிய நகரங்களில் கறுப்புப் பண ஒழிப்பு குறித்து மக்களிடம் எடுத்துக் கூறவிருக்கின்றனர்.