முதலில் உங்கள் குடும்பத்தை கவனியுங்கள் பின்பு நாட்டையும், கட்சியையும் கவனிக்கலாம் என பாஜக தொண்டர்களிடம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பாஜக கட்சி பிரமுகர்களும், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களும் கட்சி தொண்டர்களுடன் இணைப்பில் இருந்து வருவது வழக்கம். பொறுப்பு வாரியாக, மாநிலம் வாரியாக கட்சி தொண்டர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் உரையாற்றுவதையும், நேரில் சந்தித்து ஆலோசனைகள் வழங்குவதையும் பாஜக தன்னுடைய ஸ்டைலாகவே வைத்துள்ளது.
அதன்படி பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாஜக மாணவர்கள் அணிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அந்த சந்திப்பின் போது பல அறிவுரைகளை அவர் வழங்கியுள்ளார். குறிப்பாக குடும்பத்தினரின் தேவை குறித்து அவர் பேசியுள்ளார்.
அதில், ''தான் நாட்டுக்காகவும், பாஜகவுக்கும் மட்டுமே வாழ்வதாகவும், தன் வாழ்வை கட்சிக்கு அர்ப்பணிக்க உள்ளதாகவும் கூறும் எத்தனையோ பேரை நான் சந்தித்துள்ளேன். நான் ஒருவரிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்கள் குடும்ப நிலை என்ன என்று கேட்டேன். அதற்கு அவர், தான் கடை நடத்தியதாகவும் சரியான வியாபாரம் இல்லை என்பதாலும் கடையை மூடிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் தனக்கு மனைவி, குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
முதலில் குடும்பத்தை கவனியுங்கள் என்று நான் அவருக்கு அறிவுரை கூறினேன். குடும்பத்தை கவனிக்க முடியாதவரால் நாட்டை கவனிக்க முடியாது. முதலில் உங்கள் குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனியுங்கள். பிறகு நாட்டுக்கும் கட்சிக்கும் பணியாற்றுங்கள் என்று நான் கூறினேன்'' என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.