இந்தியா

ஒரு ரூபாய் கிளினிக்: டாக்டர்கள் அசத்தல்

webteam

ஒரு ரூபாய்க்கு உடல் பரிசோதனை செய்துகொள்ள மும்பை டாக்டர்கள் செய்த முயற்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மும்பையில் மின்சார ரயில்களில் அதிகமாக விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கும் ரயில்வே ஸ்டேஷன் வருகிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் ஒரு ரூபாய் கிளினிக் ஆரம்பிக்க, டாக்டர்கள் ராகுல் ஹுலே அவர் சகோதரர் அமோல் ஹூலே ஆகியோர் தீர்மானித்தனர். அவர்களுடன் டாக்டர்கள் சவிதா, அதுல் கிரி, அபய் முண்டா ஆகியோரும் இணைந்தனர்.
இதையடுத்து மும்பையில் எப்போது பரபரப்பாகக் காணப்படும் தாதர், குர்லா, காட்கோபர், முலுண்ட் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த கிளினிக் நேற்று தொடங்கப்பட்டது. தொடங்கிய முதல் நாளிலேயே ஏராளமான நோயாளிகள் சிகிச்சைப் பெற்று சென்றுள்ளனர். இந்த ஒரு ரூபாய் மருத்துவமனையில் தினமும் ஷிப்ட் முறையில் டாக்டர்கள் பணியில் இருப்பார்கள். இது சக்சஸ் ஆனால் இன்னும் 15 ரயில்வே ஸ்டேஷன்களில் இதை விரிவுபடுத்த முடிவெடுத்துள்ளனர்.

காட்கோபர் ஸ்டேஷனில் சிகிச்சை பெற்ற செல்வராஜ் என்பவர் கூறும்போது, ‘எனக்கு அதிக ரத்தம் அழுத்தம் இருக்கிறது. தோள்பட்டை வலியும் உண்டு. தோள்பட்டை வலிக்கு டாக்டர்கள் சிலர் ஆபரேஷன் செய்துகொள்ள கூறினார்கள். ஆனால் அதற்கு அதிக செலவாகும். இங்கு சிகிச்சை செய்த பின், குறைந்த செலவில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்ய பரிந்துரைத்திருக்கிறார்கள்’ என்றார்.