பிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் இருந்து பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறித்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பிரதமர் மோடியின் சகோதரர் மகள் தமயந்தி பென் மோடி. இவர் அமிர்தசரஸில் இருந்து டெல்லிக்கு நேற்று காலை வந்தார். குஜராத்தி சமாஜ் பவனில் அறை முன்பதிவு செய்திருந்தார். பழைய டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து புதுடெல்லியின் வடக்கே சிவில் லைன் பகுதிக்கு ஆட்டோவில் சென்றார். அவர் இறங்கும்போது அங்கு வந்த 2 பேர் அவரது பர்சை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பினர். இதனால் செய்வதறியாது திகைத்த அவர், திருடன் திருடன் என கத்தினார். ஆனால் அவர்கள் தப்பிவிட்டனர்.
பர்சில் ரூ.56 ஆயிரம் ரொக்கம், 2 மொபைல் போன்கள் மற்றும் சில ஆவணங்கள் இருந்தன. சம்பவம் நடந்த பகுதிக்கு அருகி லேயே டெல்லி, துணைநிலை ஆளுநர் மற்றும் டெல்லி முதலமைச்சர் ஆகியோரின் வீடுகள் உள்ளன.
இந்தச் சம்பவம் பற்றி போலீசில் தமயந்தி பென் மோடி புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் பர்சை திருடியதாக நோனு என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.