ஒடிசாவில் ஒரு மாத ஆண் குழந்தையின் நோயை குணப்படுத்த அக்குழந்தைக்கு சுமார் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் நபரங்பூர் மாவட்டம், சந்தாஹண்டி அருகே உள்ள கம்பரிகுடா பகுதியை சேர்ந்தது இந்த ஒரு மாத குழந்தை. இக்குழந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு கடும் காய்ச்சலால் அவதியடைந்து வந்துள்ளது. இதனை அறிந்த குழந்தையின் பெற்றோர்களும் உறவினர்களும் காய்ச்சல் ஏற்பட தீயசக்திதான் காரணம் என்று நினைத்துள்ளனர்.
இதனால், சூடான உலோகத்தால் சுமார் 30 - 40 தடவை குழந்தையின் வயிறு மற்றும் தலை என கம்பியால் சூடு போட்டுள்ளனர். இதனால், குழந்தை கதறி அழுதுள்ளது. அழுகையும் பொருட்படுத்தாத பெற்றோர் சூடு போட்டால் நோய் குணமாகிவிடும் என்று நினைத்து அந்த செயலை தொடர்ந்துள்ளனர்.
ஆனாலும், உடல்நிலை சீராகவில்லை மாறாக குழந்தையின் உடல்நிலை மிக மோசமானது. இதனால், உமர்கோட் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வரும் குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து விளக்கிய நபரங்பூர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி சந்தோஷ் குமார் பாண்டா , “குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டதற்கு தீயசக்திதான் காரணம் என்று குடும்பத்தினர் நம்பி சூடு வைத்துள்ளனர். ஒடிசாவின் தொலைதூரப் பகுதிகளில் இதுபோன்ற மூடநம்பிக்கை இப்போதும் இருந்து வருகிறது. எனவே, அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
மூடநம்பிக்கையின் உச்சத்தில் நடந்திருக்கும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.