இந்தியா

காஷ்மீரில் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடத்தில் வெடிகுண்டு தாக்குதல் - ஒருவர் பலி

ஜா. ஜாக்சன் சிங்

ஜம்மு - காஷ்மீரில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 13 பேர் படுகாயமடைந்தனர்.

ஜம்மு - காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகம் உள்ளது. இங்கு இன்று மதியம் வழக்கம் போல மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இந்நிலையில், 1.30 மணியளவில் அங்கு திடீரென சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. இதில் 40 வயது மதிக்கத்தக்க நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 13 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் போலீஸாரும், ராணுவத்தினரும் வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில், ஐஇடி குச்சிகள் மூலம் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. எனினும், எந்த தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியது என்பது உடனடியாக தெரிய வரவில்லை. இச்சம்பவத்தை அடுத்து உத்தம்பூர் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.