இந்தியா

உ.பி: வெள்ளத்தில் சிக்கிய கிராமம் - 3 கர்ப்பிணிகளை ட்ராக்டர் மூலம் காப்பாற்றிய ஓட்டுநர்

Veeramani

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் பகுதியில் ராமகங்கா ஆற்றின் கரையில் உள்ள குனியா கிராமத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் ஒரு கையை இழந்த ஓட்டுநர் ஒருவர் இந்த கிராமத்தில் வசிக்கும் மூன்று கர்ப்பிணிப் பெண்களை ட்ராக்டர் மூலமாக பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உதவி செய்தார்.  

குனியாவில் வசிக்கும் சுமன் மற்றும் ஷ்யாமா ஆகியோருக்கு அக்டோபர் 24 அன்று பிரசவ வலி ஏற்பட்டதால், இந்த ஊரை சேர்ந்த ஒருகையை இழந்த ஓட்டுநர் ராம் நரேஷ் அவர்களை ட்ராக்டர் மூலமாக பத்திரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஓட்டுநராகப் பணியாற்றிய நரேஷ் விபத்தில் ஒரு கையை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த நாள் அக்டோபர் 25-ம் தேதி, அட்டா கிராமத்தில் கோமதி என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அவரை ராம் நரேஷ் மருத்துவமனைக்கு டிராக்டரில் அழைத்துச் சென்றார். தற்போது மூன்று பெண்களுக்கும் ஆரோக்கியமான நிலையில் பிரசவம் நடந்து உடல்நலத்துடன் உள்ளதாக மிர்சாபூர் சுகாதார மையத்தின் பொறுப்பாளர் டாக்டர் ஆதேஷ் ரஸ்தோகி தெரிவித்தார். நரேஷின் முன்மாதிரியான பணிக்காக அவரை கவுரவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.