இந்தியா

மோடியின் விமானம் பறக்க பாகிஸ்தான் மீண்டும் அனுமதி மறுப்பு

webteam

தனது நாட்டு வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க, பாகிஸ்தான் மீண்டும் அனுமதி மறுத்துள்ளது.

சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக சவுதி அரேபியாவுக்கு இன்று செல்கிறார். ரியாத்தில் நடைபெறும் சர்வதேச தொழில் மன்றத்தின் கூட்டத்தில் அவர் கலந்துகொள்கிறார். பின் சவுதி மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல்சாத் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் அல்சாத் ஆகியோரையும் சந்தித்து பேசுகிறார். 

இதற்காக பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்தி, பிரதமர் மோடியின் விமானம் சவுதி அரேபியா செல்ல அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், அந்நாட்டு வான்வெளியை பயன்படுத்த அனுமதி மறுத்துள்ளது பாகிஸ்தான்.

ஏற்கெனவே கடந்த செப்டம்பர் மாதம் ஐநா கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியின் விமானத்துக்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்திருந்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விமானத்துக்கும் அனுமதி மறுத்திருந்தது. இப்போது மீண்டும் மறுப்புத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த முடிவுக்கு வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கடும் ஆட்சேபத்தைத் தெரிவித்துள்ளார்.