கேரள மக்களின் வசந்த விழா என்று அழைக்கப்படும் ஓணம் பண்டிகை இன்று தொடங்கியது.
கேரளாவில் ஓணம் பண்டிகை இன்று தொடங்கியது. அதையொட்டி, அத்தப்பூ கோலம் போடுவதற்காக கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச்சந்தையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் பூக்கள் கொண்டு செல்லப்பட்டன. கேரள மக்களின் வசந்த விழா என்றழைக்கப்படும் திருவோணப் பண்டிகை, ஆண்டுதோறும் ஆவணி மாதம் 10 நாள் கொண்டப்படுவது வழக்கம்.
மாவேலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, பொதுநிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 10 நாள் விழாவின் முதல் நாள் விழா கேரளாவில் இன்று தொடங்கியது. இதற்காக வழக்கமாக கேரளாவில் இருந்து வியாபாரிகள் தோவாளை பூச்சந்தைக்கு வருவது வழக்கம். ஊரடங்கு காரணமாக கேரளாவில் இருந்து, வியாபாரிகள், பொதுமக்கள் வராதநிலையில், தொலைபேசி வழி ஆர்டர்கள் பேரில், தோவாளை பூச்சந்தையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் பூக்கள் கொண்டு செல்லப்பட்டுவருகின்றன.