இந்தியா

சபரிமலையில் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு

சபரிமலையில் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு

webteam

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறப்பதால் நவம்பர் 3 ஆம் தேதி நள்ளிரவு முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். 

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அன்மையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இதனால் அப்பகுதிகளில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து ரெஹானா பாத்திமா என்ற பெண் பத்திரிகையாளரும் கவிதா என்ற மற்றொரு பெண்ணும் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்றனர். அப்போது எதிர்ப்பு வலுக்கவே சன்னிதானம் வரை சென்று மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். 

இதைதொடர்ந்து ஐப்பசி மாத பூஜை நிறைவடைந்ததையடுத்து சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை மூடப்பட்டது. இந்நிலையில் மண்டல பூஜைக்காக நவம்பர் 5 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. இதனால் பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் ஆகிய பகுதிகளில் நவம்பர் 3 ஆம் தேதி நள்ளிரவு முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பூஜையின் போது சட்டம் ஒழுங்கு கெடாமல் பாதுகாக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.