இந்தியா

IND Vs NZ ஆட்டத்தின்போது திடீர் மாரடைப்பால் சுருண்ட காவலர்! CPR செய்து அசத்திய அதிகாரிகள்

kaleelrahman

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இந்தூரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது பணியில் இருந்த போலீஸ் அதிகாரிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

நேற்று (ஜனவரி 24) இந்தூரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. அப்போது பணியில் இருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் பிரசாந்த் சௌபே தெரிவித்தார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியின் போது சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பில் இருந்த டிஎஸ்பி சவுகானுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இந்நிலையில், சுயநினைவின்றி இருந்த அவரை, காவல்துறை அதிகாரிகள் முதலில் மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸூக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஆம்புலன்ஸில் ஓட்டுனர் இல்லாததால் போலீஸ் வாகனத்தில் சவுகான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சவுகானுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மைதானத்தில் இருந்த காவலர்கள் முதலில் அவருக்கு கார்டியோபுல்மோனரி ரெசசிடேஷன் (சிபிஆர்) செய்தனர் என்றும், அலட்சியமாக இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சவுகான் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மூத்த அதிகாரி சௌபே கூறினார்.