ஜார்கண்ட் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு 3 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கடத்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஜார்கண்ட் மாநிலத்தின் டாடா நகர் ரயில்வே நிலையத்தின் நடைமேடையில் மூன்று வயது சிறுமியும் அவரது தாயும் கடந்த வெள்ளிக்கிழமை தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். பின்னர் சிறுமியின் உடலை ரயில்வே நிலையத்திற்கு அருகிலுள்ள புதரில் பிளாஸ்டிக் பையில் வைத்து வீசியுள்ளனர்.
இதனையடுத்து சிறுமியின் தாய் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். காவல்துறையினர் ரயில் நிலையத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது அக்குழந்தையை இரண்டு நபர்கள் தூக்கி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதை வைத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஏற்கெனவே பாலியல் குற்றங்களில் தொடர்புடைய ரிங்கு சாகு இதில் சம்பந்தப்பட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ரிங்கு சாகுவை பிடித்து விசாரித்ததில், அவர் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு உடலை தூக்கி போட்டதை ஒப்புக்கொண்டார். அவர் கூறிய தகவலை வைத்து காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டனர். எனினும் குழந்தையின் தலை மட்டும் கிடைக்கவில்லை. ஆகவே மோப்ப நாய் உதவியுடன் அச்சிறுமியின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு மழை பெய்து வருவதால் தலையை தேடும் பணியில் பிணக்கு ஏற்பட்டுள்ளது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையாளிகளில் ஒருவரான ரிங்கு சாகு கடந்த 2015 ஆண்டு குழந்தையை கடத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில் சிறையில் இருந்து வந்தார். அண்மையில்தான் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
குழந்தையின் தாயார் தனது கூட்டாளி ஒருவரை சந்தேகிப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்போது தெரிவித்திருந்தார். கைது செய்யப்பட்ட மூவரில் அந்த நபரும் ஒருவர் ஆவார். இந்நிலையில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க காரணமாக இருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.