இந்தியா

மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருந்த இளைஞர் சுருண்டுவிழுந்து மரணம்.. அதிர்ச்சி வீடியோ

சங்கீதா

ஜம்முவில் பார்வதி அவதாரத்தில் நடனம் ஆடிக்கொண்டிருந்த 21 வயது இளைஞர், மேடையிலேயே சுருண்டு விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவுக்கு பிந்தைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் உள்பட பலரும் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக மேடையில் கலைஞர்கள் உயிரிழப்பது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. அண்மையில் பிரபல பாடகர் கே.கே. மேடையில் பாடிக்கொண்டிருந்தபோது, ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக பாடுவதை நிறுத்திவிட்டு ஓட்டலுக்கு திரும்பியபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதேபோல், கேரளாவைச் சேர்ந்த மூத்த பாடகர் எடவா பஷீர் ஆலப்புழாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மேடையிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

அந்த வகையில், ஜம்முவில் யோகேஷ் குப்தா என்ற 21 வயது இளைஞர், கணேஷ் உற்சவத்தை முன்னிட்டு, பார்வதி அவதாரத்தில் மேடையில் உற்சாகமாக ஆடிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்துள்ளார். ஆனால், பார்வையாளர்கள் ஆட்டத்தின் ஒருபகுதி என எண்ணிக்கொண்டு காத்திருக்கையில், அதன்பிறகும் யோகேஷ் குப்தா எழுந்திருக்கவில்லை.

இதையடுத்து, சிவன் அவதாரம் இட்ட மற்றொரு நபர் உள்பட பார்வையாளர்கள் சென்று யோகேஷ் குப்தாவை எழுப்ப முயற்சித்துள்ளனர். ஆனால், அப்போதும், அவர் எழுந்திருக்காததை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளநிலையில், வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.