ரயிலில் திடீரென பிரசவ வலி வந்த பெண்ணுக்கு இந்திய ராணுவ மருத்துவர்கள் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதவி தேவைப்படுபவர்களுக்கு இந்திய ராணுவம் எப்போதும் துணை நிற்கும் என்பதற்கு ஏற்றவாறு சமீபத்தில் நடந்த நிகழ்வு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்திய இராணுவ மருத்துவர்கள், கேப்டன் லலிதா மற்றும் 172 ராணுவ மருத்துவமனையின் கேப்டன் அமன்தீப் ஆகியோர் ஹவுரா எக்ஸ்பிரஸில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ரயிலில் வந்த ஒரு கர்ப்பிணி பயணிக்கு முன்கூட்டியே பிரசவ வலி வந்துள்ளது. தகவலறிந்த லலிதா மற்றும் அமன்தீப் ஆகியோர் அந்தப் பெண்ணிற்கு பிரசவம் பார்த்தனர். இதில் தாய் அழகான குழந்தையை பெற்றெடுத்தார். இதையடுத்து தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளனர்.
இதைத்தொடர்ந்து மருத்துவர்களின் செயலை பாராட்டும் வகையில் இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த செய்தியையும் புதிதாகப் பிறந்த குழந்தையின் படத்தையும் பகிர்ந்துள்ளது. குழந்தை பிறந்த ஹவுரா எக்ஸ்பிரஸ், இந்திய ரயில்வேயின் சூப்பர்ஃபாஸ்ட் ரயில் ஆகும். இது மேற்கு வங்காளத்தின் ஹவுரா சந்திப்புக்கும் குஜராத்தின் அகமதாபாத் சந்திப்புக்கும் இடையில் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.