ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இடங்களிலுள்ள ராணுவ தளங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து, ஏவுகணை தாக்குதல் மற்றும் ட்ரோன்களை வைத்து தாக்க முயற்சித்தது. இதனைத்தொடர்ந்து இந்திய படைகள், பாகிஸ்தானுக்கு பதிலடி அளித்தன.
குறிப்பாக, போர் ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லைகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.
ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்கி பாகிஸ்தான் படையினா் வியாழக்கிழமை இரவு தொடா் தாக்குதல் நடத்தினா்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மறு அறிவிப்பு வரும்வரை அமிர்தசரஸ் விமான நிலையத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தவகையில், சர்வதேச எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் 50 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளது இந்திய பாதுகாப்பு படை. உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், பதன்கோட் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் அழிப்பு என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
”ஜம்முவில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல் தோல்வி அடைந்துள்ளது. நான் நிலைமையை ஆராய ஜம்முவிற்கு விரைந்துள்ளேன் '' என்று உமர் அப்துல்லா சமூகவலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.
பாகிஸ்தானின் தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் உச்சபட்ச உஷார் நிலையில் இருந்தன. பொதுமக்கள் வாழும் பகுதியை இலக்கிட்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால், எல்லை மாநிலங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்தவகையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளில் எல்லையோர மாநிலங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் விடுமுறையை ரத்து செய்துவிட்டு பணிக்கு திரும்ப முதல்வர் பஜன்லால் சர்மா அறிவுறுத்தியுள்ளார்.