பாகிஸ்தானுக்கு நிறுத்தப்பட்ட சிந்து நதி நீரை பகிர்ந்துகொள்வதில் இந்தியாவில் காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ளது. இதனால் 3 நதிகள் மூலம் கிடைக்கும் உபரி நீரை 113 கிலோ மீட்டர் தொலைவுக்கு கால்வாய் தோண்டி காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் தங்கள் நீரை பஞ்சாப்புடன் பகிர்ந்துகொள்ள காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தங்கள் மாநிலத்திலேயே கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதாகவும் அப்பிரச்சினைக்கு தீர்வு கண்டபின்பே மற்றவர்களுக்கு தருவது குறித்து யோசிக்கமுடியும் என்றும் அப்துல்லா தெரிவித்தார். ஆனால் சிந்து நிதியின் 3 கிளை நதிகளின் நீரில் தங்களுக்கு உரிமை உள்ளதாக பஞ்சாப் முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி, காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் கட்சிகளும் காஷ்மீர் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் மத்திய அரசுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.