இந்தியா

'மிஷன் சவுத்' - வளைக்கப்படும் பிரபலங்கள்... பாஜகவில் இணைகிறாரா பி.டி உஷா?!

webteam

நாட்டின் தென்பகுதிகளில் காலூன்ற பாஜக போராடி வருகிறது. கேரளாவை அதற்கேற்ற தளமாக பார்த்து வரும் பாஜக, இந்த முறை எப்படியும் வெற்றிக்கணக்கை துவக்கிவிட நினைக்கிறது. இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் தேர்தலை பயன்படுத்திக்கொள்ள இப்போதே வேலையை துவங்கிவிட்டது. 'மிஷன் சவுத்'-ன் ஒரு பகுதியாக, பாஜக தன்னை நிலைநிறுத்துவதில் ஆர்வமாக உள்ளது. எனவே, அதற்கான வாய்ப்புகளை பயன்படுத்த தொடங்கியுளளது.

'மிஷன் சவுத்' தவிர, பாஜகவின் மற்ற நோக்கம் காங்கிரஸ் வாக்குகளை குறைப்பதாகும். வரவிருக்கும் தேர்தலில் கேரள மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று காங்கிரஸ் நம்புகிறது. காங்கிரஸுக்கு இழப்பு ஏற்பட்டால், ராகுல் காந்தி கேரளாவைச் சேர்ந்த எம்.பி. என்பதால். அது அவருக்கு மிகவும் சங்கடமாக இருக்கும் என்று பாஜக கணக்கு போட்டு வேலை பார்க்கத் தொடங்கியுள்ளது என்று கேரள அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்து வாக்காளர்களிடமும், சபரிமலை ஆதரவாளர்களிடம் இருந்தும் பாஜக தனது தளத்தை வலுப்படுத்த எதிர்பார்க்கிறது. கேரள நகர்ப்புற இளம் வாக்காளர்களை கவரவும் பாஜக விரும்புகிறது. அந்தவகையில், சில பிரபலமான திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் கலாசார மற்றும் சமூகத் துறையைச் சேர்ந்த பிரபலங்களை தங்கள் கட்சியில் இணைத்து வருகிறது. சமீபத்தில் ’மெட்ரோ மேன்’ என அழைக்கப்படும் ஸ்ரீதரன், பாஜகவில் சேரப்போவதாக அறிவித்தார். அவரை அடுத்து தற்போது பிரபல தடகள வீராங்கனையும், வேகத்துக்கு பெயர் பெற்றவருமான பிடி உஷாவும் பாஜகவில் இணைய இருப்பதாக கேரள அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

சட்டமன்றத் தேர்தலுக்காக அவரை பாஜக கவர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவாரஸ்யமாக, சில நாட்களாக வெளியாகி வரும் இந்த ஊகங்களுக்கு உரம் போடும் வகையில் பிடி உஷாவின் சமீபத்திய நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. அவரது ட்வீட்டுகள் பாஜகவை நோக்கி சாய்வதை சுட்டிக்காட்டுகின்றன. சமீபத்தில், பாப் நட்சத்திரம் ரியானா மற்றும் சூழலியல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் ஆகியோரின் ட்வீட்களைக் கண்டித்து ட்வீட் செய்த ஆளுமைகளில் பிடி உஷாவும் இருந்தார்.

``நாங்கள் எங்கள் சொந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம். ஜனநாயகத்தின் உண்மையான மாதிரியாக இருக்கிறோம். எங்கள் உள் விஷயங்களில் தலையிட வேண்டாம். எங்கள் சொந்த பிரச்னைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது எங்களுக்குத் தெரியும். ஏனென்றால், உலகில் ஒரே ஒரு நாடு, பன்முகத்தன்மையில் ஒற்றுமையை நிலைநிறுத்துகிறது என்றால் அது இந்தியாதான்" என்று கருத்து பதிவிட்டு இருந்தார். இந்த ட்வீட்கள் ஊகங்களுக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்து இருக்கிறது.

எவ்வாறாயினும், இந்த விஷயத்தில் உஷா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மார்ச் முதல் வாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கேரளாவில் பேரணி நடக்க இருக்கிறது. இதில் அநேகமாக பிடி உஷா பாஜகவில் இணையலாம் என்று 'ட்ரிப்யூன்' செய்தி வெளியிட்டு இருக்கிறது.

மாநிலத்தில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இடது மற்றும் காங்கிரஸின் ஆதிக்கத்தில் இருக்கும் கேரளாவில் தனது வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று பாஜகவின் நம்பிக்கை உள்ளது. முந்தைய சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற முடிந்த ஒரு இடத்திற்கு மேல் கட்சி வெற்றி பெறும் என்று நம்புகிறது.