இந்தியா

இந்தியா வந்த உலகின் பழமையான விமானம்

இந்தியா வந்த உலகின் பழமையான விமானம்

webteam

உலகின் பழமையான விமானமாகக் கருதப்படும் டகோடா சி-43 (Dacota C-43) உலக சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக இந்தியா வந்தது.

நாக்பூரில் தரையிறக்கப்பட்டுள்ள அந்த விமானம் கடந்த 1940களில் தயாரிக்கப்பட்டது. சுருக்கமாக டிசி-3 என்றழைக்கப்படும் இந்த வகை விமானங்கள் 1947 மற்றும் 1965 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் முக்கியமான பங்கு வகித்தவை. அந்தவகை விமானங்களே இரண்டாம் உலகப்போரின்போது அதிகம் பயன்படுத்தப்பட்டன. கடந்த 77 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் டிசி-3 ரக விமானம் ஒன்று உலகம் முழுவதும் 55 நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம், 11ஆவது நகரமாக பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து மகராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் வந்துள்ளது. விமானம் உருவாக்கப்பட்டு 77 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கடந்த மார்ச் 9ம் தேதி சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உலக சுற்றுப்பயணத்தை அந்த விமானம் தொடங்கியது. கடந்த 1935-1950 இடைப்பட்ட காலத்தில் 16,000த்துக்கும் மேற்பட்ட டிசி-3 ரக விமானங்கள் டக்ளஸ் ஏர்கிராஃப்ட் எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டன.